(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை புதைக்கவோ, எரிக்கவோ முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள போதிலும் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளாமலே செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான், அரசாங்கத்தின் இதுபோன்ற செயற்பாடுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலத்தை அவர்களின் கும்பத்தாரின் விருப்பத்தின் பெயரில் எரிக்கவும் அல்லது புதைக்கவும் முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. ஆனால், அரசாங்கம் அந்த விடயத்தை பின்பற்றுவதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பில் நாட்டிலுள்ள சிவில் அமைப்புகள், வைத்தியர்கள் என பலரும் அரசாங்கத்தின் முடிவை கண்டித்ததுடன் அவர்களின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் ஒரு குழுவை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அரசாங்கம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களை எரிக்க வேண்டும் என்ற முடிவிலேயே இருக்கின்றது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பாக அரசாங்கம் கொண்டுள்ள கொள்கையை பொதுத் தேர்தலின் பின்னர் மாற்றியமைப்பதாக கூறப்பட்டு வந்த போதிலும். இதுவரையிலும் அதில் மாற்றம் ஏற்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலத்தை குடும்பத்தாரின் விருப்பம் இன்றி, அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை எரித்துள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் உணர்வுகள், உரிமைகள், தேவைகள் என்பவற்றை மதிக்கக் கூடியதாக இல்லை என்பதை மீண்டும் நிரூபித்து காண்பித்துள்ளது.

நாட்டின் நன்மை கருதியும் மக்களின் நன்மை கருதியும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது. எனவே அரசாங்கத்தின் இந்த முடிவை மீண்டும் நாம் கண்டிக்கிறோம்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே இது போன்ற தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுவோம். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளினால் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவப்பெயரே ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.