(ஆர்.ராம்)

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் அங்கத்துவத்தினைப் பெறுவதற்கு தமிழ்த் தரப்பிலிருந்து துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முன்வருவார்களாக இருந்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடத்தில் சிபார்சு செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் கிழக்கு மாகாண தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த செயலணியில் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்துமூலமான கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளை பரிந்துரை செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கில் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்களை செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களை செயலணியில் பெயரிடுவதற்கான விருப்பத்தினையும் கோரிகால அவகாசத்தினையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், குறித்த செயலணிக்கு அஸ்கிரிய பீடத்தின் வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் நிருவாக சபை உறுப்பினர் கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகிய நான்கு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்புகொண்டு வினவியபோது அவர் தெரிவித்தாவது, தொல்பொருள் துறைசார் நிபுணத்தவம் வாய்ந்தவர்களை வடக்கிலும், கிழக்கிலும் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்களிடத்தில் செயணியில் அங்கத்துவத்தினை பெறுவது பற்றிய விடயங்களை விரிவாக கலந்துரையாடி அவர்களின் தீர்மானித்தினைப் பெறுவதற்கு முனைந்தேன். அதற்கடுத்து பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னரும் அந்த விடயம் சம்பந்தமான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தேன்.

ஆனால் இதுவரையில் வடக்கு கிழக்கிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் ஜனாதிபதி செயலணியில் அங்கத்துவத்தினைப் பெறுவதற்கு தயார் என்று கூறி முன்வரவில்லை. அவ்வாறு முன்வருவார்களாயின், ஜனாதிபதி கோத்தாபயவிடத்தில் சிபார்சு செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.