இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கலாநிதி தீபிகா உடகம கையளித்துள்ளார்.

அரசியலமைப்புப் பேரவை கூடிய போது கலாநிதி தீபிகா உடகமவின் இராஜினாமா கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கலாநிதி தீபிகா உடகம, ஜனாதிபதிக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதுடன் அதன் பிரதியே அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை நேற்று (03) கூடியபோது, மனித உரிமை ஆணைக்குழுவில் அவர் ஆற்றிய சேவை தொடர்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
 
அரசியலமைப்பு பேரவை நேற்று பிற்பகல் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிகளான அஹமட் ஜாவிட்ட யூசூப், நாகானந்தன் செல்வகுமாரன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்ப திசாநாயக்க ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரச சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல் தொடர்பில் கலந்துரையாடிய அரசியலமைப்பு பேரவை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் செயற்பாடு அடுத்த கூட்டம் வரை பிற்போடுவதற்கு தீர்மானித்தது.

நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவினால் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காலாண்டு அறிக்கையும் இதன்போது ஆராயப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.