(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக குடும்ப ஆட்சியை மக்கள் தமது வாக்குகளால் தோல்வியடையச் செய்ய வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாக்க தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை கொழும்பு பஞ்சிகாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினைப் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில குழுக்கள் தனி கட்சி ஜனநாயகத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றன. உண்மையில் அது ஒரு குடும்பம் சார்ந்த ஜனநாயகமாகவே இருக்கும். அந்த குடும்ப ஆட்சியை மக்கள் தமது வாக்குகளால் தோல்வியடையச் செய்ய வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வேண்டும்.

இன்று நீதியானதும் அமைதியானதுமான தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தலுக்கு முன்னர் பிரசாரங்களின் போது அரச சொத்துக்களை பாவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட மீறல்கள் இடம்பெற்றன. இவை இம்முறை மாத்திரமல்ல. 

ஒவ்வொரு அரசாங்கமும் தமது பலத்தை தக்க வைத்துக்கொள்ள இவ்வாறு சட்டத்திற்கு முரணாகவே செயற்படுகின்றன.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதோடு மாத்திரமின்றி, அரசாங்கத்தின் தேவைக்கேற்ப செயற்படாது தமக்குரிய அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி நீதியானதும் அமைதியானதுமான தேர்தலை நடத்தியதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னரே எமது நாட்டில் அரசியல் மீள ஆரம்பிக்கிறது. அதன் பின்னரான அரசியலில் தேசிய மக்கள் சக்தி மிக முக்கிய இடத்தை வகிக்கும். கடந்த தேர்தலை விட இம்முறை எம்மால் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.