குருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கோபேகென வாக்குச் சாவடியிலும் மீள்வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தக் கோரிக்கையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ளார்.

பிரதமரும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ச குறித்த மூன்று வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவுகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு சுமார் 100 ஆதரவாளர்களுடன் பிரவேசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சுதந்திரமான தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்பை வழங்காது என்றும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த மூன்று வாக்குச் சாவடிகளிலும் மீள்வாக்குப் பதிவுகளை நடத்த வேண்டும் என்று அவர் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை கேட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச அனுமதியில்லாமல் தமது பெரும்பாலான ஆதரவாளர்களுடன் நிக்கரவெட்டிய தொகுதிக்கு சென்றமையை தேர்தல் வன்முறைகளுக்கான கண்காணிப்பு மையமான சீஎம்ஈவி உறுதி செய்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது பிரதமர் மஹான் தேசிய பாடசாலையின் இரண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றதாக அந்த கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.