இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 1-1 என சமன் செய்தது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

3-வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி சார்பில் முதலில் களமிறங்கிய பாபர் அசாம் (21), பகர் ஜமான் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.


அடுத்து களம் இறங்கிய இளம் வீரர் ஹைதர் அலி 33 பந்தில் 54 ஓட்டங்கள் விளாசினார். அனுபவ வீரர் முஹமது ஹபீஸ் 52 பந்தில் 86 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 191 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டாம் பான்டன் 31 பந்தில் 46 ஓட்டங்கள் அடித்தார். மற்றொரு வீரர் பேர்ஸ்டோவ் ஓட்டம் ஏதும் அடிக்காமல் டக்வுட் ஆனார். தாவித் மலன் 7 ஓட்டங்களுடனும், மோர்கன் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மொயீன் அலி அதிரடியாக விளையாட இங்கிலாந்து வெற்றி நோக்கி சென்றது. கடைசி 2 ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வஹாப் ரியாஸ் வீசினார். முதல் பந்தில் ஜோர்டான் ரன்அவுட் ஆனார்.

5-வது பந்தில் மொயீன் அலி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 61 ஓட்டங்கள் விளாசினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்கள் மட்டுமே இங்கிலாந்தால் அடிக்க முடிந்தது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.


கடைசி ஓவரை ஹரிஸ் ரவுப் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ஓட்டங்கள் அடிக்கப்பட்டது. 5-வது பந்தை டாம் கரன் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தில் கரனால் ஓட்டம் ஏதும் அடிக்க முடியவில்லை.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் தொடரை பாகிஸ்தான் 1-1 என சமன் செய்தது. முஹமது ஹபீஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.