அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்கு மூலமளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று (04) காலை ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியிருந்தார்.

முற்பகல் 10 மணியளவில் ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மாலை 3 மணியளவில் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமைய, ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவித்தலுக்கு அமைய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

திவிநெகும, திணைக்களமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், தாமாகவே பணியிலிருந்து விலகிய தொழிலாளர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளையும் வீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணங்களையும் வழங்கியதாகத் தெரிவித்து தம்மைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்தமையானது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையெனத் தெரிவித்து வைத்தியர் நிஹால் ஜயதிலக்க ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தார்.

இந்த முறைப்பாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, இரா.சம்பந்தன், மலிக் சமரவிக்ரம, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம், 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு சென்றிருந்தார். தாக்குதல் தொடர்பில் பல தரப்பினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் குறித்து ரவூப் ஹக்கீமிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுக்கு விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.