(எம்.மனோசித்ரா)

20 ஆவது திருத்தம் மிகப் பாரதூரமானதாகும். ஜனநாயகம் அழிந்துவிட்டது. அதை மாத்திரமே என்னால் கூற முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவினுடைய கொள்கைகளை செயற்படுத்தக் கூடிய சிறந்த தலைமைத்துவத்தை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவ்வாறு இதுவரையில் யாரும் கிடைக்கவில்லை என்றும் முன்னாள் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்க சமாதிக்கருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கேள்வி : பண்டாரநாயக்கவினுடைய கொள்கைகளுக்கு என்ன ஆயிற்று ?

பதில் : பண்டாரநாயக்கவினுடைய கொள்கைகளை நான் தேடிக் கொண்டிருக்கின்றேன். என்னிடமும் சுதந்திர கட்சியை உண்மையாக நேசிப்பவர்களிடத்திலும் மாத்திரமே அந்த கொள்கைகள் காணப்படுகின்றன. வேறு யாரிடமும் இல்லை. அவை செயற்படுத்தப்படவுமில்லை.

கேள்வி : சுதந்திர கட்சிக்கு எதிர்காலத்தில் என்ன ஆகும் ?

பதில் : அது எனக்கு தெரியாது. என்னை கட்சியிலிருந்து புறந்தள்ளியிருக்கிறார்கள். தற்போது கட்சியில் இருப்பவர்களிடமே அதனைக் கேட்க வேண்டும்.

கேள்வி : உங்களை அவ்வாறு கட்சியிலிருந்து புறந்தள்ள முடியாதல்லவா? கட்சி உங்களுடையதல்லவா?

பதில் : இல்லை. ஏனையவர்களைப் போன்று கட்சி என்னுடையதென்று கூறும் குடும்ப ஆட்சியைப் போன்று நான் செயற்பட மாட்டேன். தந்தை உருவாக்கிய கட்சியை என்னுடைய தாய் மக்களுக்காக பாதுகாத்தார். நானும் அதனைப் பாதுகாத்து மக்கள் பிரதிநிதிக்னே வழங்கினேன். ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் கட்சியை துண்டு துண்டாக சிதைத்துவிட்டார்கள்.

கேள்வி : கட்சியை மீளக் கட்டியெழுப்ப நீங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவில்லையா ?

பதில் : எதைக் கொண்டு மீளக் கட்டியெழுப்புவது? பண்டாரநாயக்கவினுடைய கொள்கைக்கு அமைய மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு ஊழல் மோசடியில் ஈடுபட முடியாது, கொலை செய்ய முடியாது, அரச நிதியை மோசடி செய்ய செய்ய முடியாது. இவ்வாறான ஒருவர் சுதந்திர கட்சியில் இருக்கிறாரா என்று நான் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி : 20 ஆவது திருத்தம் பற்றி உங்கள் நிலைப்பாடு ?

பதில் : 20 ஆவது திருத்தம் மிகப் பாரதூரமானதாகும். ஜனாநாயகம் அழிந்துவிட்டது. அதை மாத்திரமே என்னால் கூற முடியும் என்றார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.