உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள் விஷேட அதிரடிப்படைக்கு பரிமாறப்பட்டிருந்தால் குறைந்தது கொழும்பை மூடி கொழும்பில் நடந்த தாக்குதல்களையாவது தடுத்திருக்கலாம் என விஷேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் 2019 ஏப்ரலில் நடைபெறவுள்ள தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களை குறிப்பாக தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான எம்.ஆர். லத்தீப் மேலும் தெரிவிக்கையில் “நான் பிரான்ஸ் நாட்டில் ஒரு பயிற்சி திட்டத்தை நிறைவு செய்து விட்டு நாடு திரும்பியதும் அது குறித்து கடந்த 2019 ஏப்ரல் 10 இல் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அறிவிக்கவென தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன். அப்போது ஜயசுந்தரவிடம் ஏதாவது விசேஷம் உண்டா என நான் கேட்டதற்கு அவர் எந்த விசேஷத்தையும் எனக்கு அறிவிக்கவில்லை என்றார்.

எப்படியிருப்பினும் பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியம் குறித்த புலனாய்வுத் தகவல்களை ஏப்ரல் 10 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவை பெற்றதாக முன்னாள் பொலிஸ் மா அதிபரால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 4 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவை பெற்றுக் கொண்ட பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியம் குறித்த கேள்விக்கு தனது அலுவலகம் 2019 ஏப்ரல் 9 இல் அதைப் பெற்றதாக சாட்சி கூறினார். ஆனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் நான் மீளவும் இலங்கைக்கு வரும் வரை தனக்கு தொலைபேசி வாயிலாக அறிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் பெர்னாண்டோ மற்றும் ஜயசுந்தர ஆகியோரை ஏப்ரல் 11 இல் சந்தித்தேன். அந்தத் தினத்தில் கூட ஒரு தாக்குதலின் சாத்தியம் குறித்து அவர்கள் கூறவில்லை” என்றார்.

மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாவை முடித்து ஏப்ரல் 19 இல் இலங்கை திரும்பியதாகத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் அந்தத் தினத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பெர்னாண்டோ மற்றும் ஜயசுந்தரவுக்கு அழைப்பெடுத்ததாகவும் அந்த நேரத்தில் கூட பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியம் குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.

லத்தீப் மேலும் கூறுகையில் 16 ஏப்ரல் 2019 இல் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. ஆனால் ஏப்ரல் 20. 2019 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன இது பற்றி என்னிடம் விவரித்தார். அந்த நேரத்தில் கூட ஏப்ரல் 20 ஆம் திகதி அவரால் பெறப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் குறித்து ஜெயவர்தன என்னிடம் அறிவிக்கவில்லை. அதனாலேயே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஜெயவர்தன ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவர் புலனாய்வுத் தகவல்களில் கவனம் செலுத்தியிருந்தால் குறைந்தது கொழும்பை மூடி கொழும்பில் நடந்த தாக்குதல்களையாவது தடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இதன்போது விசாரணை ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கும் உங்களுக்கும் இடையிலான அதிகாரபூர்வ உறவுமுறை என்ன என்று வினவியதற்கு சில வகையான உறவு முறை இருந்தது. அது இருக்க வேண்டும் என இல்லை என்றார்.

அந்த நேரத்தில் சிறப்பு அதிரடிப்படை தனிப்பட்ட அமைச்சின் கீழ் இருந்தது. பொலிஸ் தலைமைக் காரியாலயம் குறிப்பிட்ட சில கடிதங்களைப் பரிமாற்றும் போது சில தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது எனவும் அவர் கூறினார்.

(தினக்குரல்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.