( எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 161 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டிருந்த நிலையில், பிரபல சமூக வலைத்தள எழுத்தாளர் ரம்ஸி ராஸிக், கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்.) நோக்கம், ரம்ஸி ராஸிக் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான காரணி உள்ளிட்டவற்றை ஒப்பீடு செய்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின்  வாதங்களையும் ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதி குறித்த பிணையினை வழங்கியது. அதன்படி  ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் சமூக வலைத்தள எழுத்தாளர் ரம்ஸி ராஸிக் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தான் எழுதிய கட்டுரையில், ; அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் சிந்தனா ரீதியான போராட்டம்  ( ideological war) ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

 இதனை தொடர்ந்து ரம்ஸி ராசிக்கிற்கு முகநூல் வாயிலாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலிஸாரிடம் தனக்கு விடுக்கப்படும் மிரட்டல்களைக் குறித்து முறையிட்டார். ஆனால், இந்த மிரட்டல்களைக் குறித்து விசாரணை செய்யாமல் பொலிஸார் ராசிக்கைக் கைது செய்தனர்.

இது குறித்து விசாரணை செய்த சி.ஐ.டி., ரம்ஸி ராசிக்கை நீதிவான் நீதிமன்றத்துக்கு பிணை அளிக்கும் அதிகாரமற்ற சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பட்டு சட்டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்திருந்தது.

' எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் ஆரம்பத்தில் மக்களின் மனநிலையை மாற்றவே முயற்சிப்பதாகவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தள பதிவுகளை அனைவரும் பார்க்கும்படியாக (பப்லிக்) பதிவிட்டு வந்துள்ளார்.

 இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, 28 ஆம் திகதி மற்றும் 2019 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி போன்ற தினங்களிலும் அவர் இதுபோன்ற பதிவுகளைப் பதிவிட்டுள்ளார் என்றும் அதற்கு சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது மக்களிடையே குழப்பத்தை தூண்டும் வகையில் இருந்துள்ளமையை தெளிவாகின்றது.' என சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள் நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக கூறினர்.

இந் நிலையிலேயே ரம்ஸி ராசிக் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ரம்ஸி ராசிக் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை மனுவினை தாக்கல் செய்த நிலையில், அது நேற்று பரிசீலனைக்கு வந்தது.

 இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெத்தி முன்னிலையில், இந்த விவகாரம் தொடர்பிலும் பொலிஸார் செயற்பட்டுள்ள விதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டி பிணைக் கோரினார்.

' எனது சேவைப் பெறுநர் கைது செய்யப்பட காரணமாக கூறப்படும்  பதிவு, இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் விதமான பதிவொன்று அல்ல.  குறித்த பதிவு முஸ்லிம்கள் வன்முறைகளை நோக்கி செல்லக் கூடாது என்பதையே வேண்டுவதாக உள்ளது. சொற்களையன்றி முழுமையான கருத்தையே பார்க்க வேண்டும். சிந்தனா ரீதியிலான போராட்டம் என்பது ஆயுதப் போராட்டங்கள் அல்ல. கருத்துக்களால் மோதுவதையே அது குறிக்கின்றது.  இது யுத்தத்தை தூண்டும் பதிவல்ல.  அப்படியாக இருக்கும் போது எனது சேவை பெறுநரின் கருத்தை தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டு அவரைக் கைது செய்துள்ளமை  தவறானதாகும்.

அத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள எனது சேவை பெறுநரான ரம்ஸி ராஸிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் என்பதோடு ஏனைய அவரது ஆரோக்கிய நிலைமையையும் கருத்திற் கொண்டு பிணை வழங்கப்பட வேண்டும்.சிறுநீரகப் பாதிப்பு, மூட்டு அழற்சி, ஈரல் சிக்கல்கள், காலில் காயங்கள் என ராசீக் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்' என  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றைக் கோரினார்.

இதனையடுத்து திறந்த மன்றில் பிணை வழங்க அனுமதித்த நீதிபதி ஆதித்த பட்டபெதி, தனது பிணை உத்தரவில் பின்வருமாறு சுட்டிக்கடடினார்.

' சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சட்டம் இலங்கையில் அமுல் செய்யப்பட்டதன் நோக்கம், சர்வதேச ரீதியில் உள்ள அடிப்படை உரிமைகளை இலங்கை மக்களுக்கும் உறுதி செய்வதாகும். அப்படியாயின் அவ்வாறான உரிமைகளில் , சுதந்திரங்களில் கருத்து சுதந்திரம் மிக முக்கியமானது.

 ஒருவர் பேனை, கணினியைக் கொண்டு போராடுவது என்பது, கருத்துக்கள் சார்ந்து முன்னெடுக்கும் நடவடிக்கையே.  அதற்கு வித்தியாசமான பொருட்கோடல் கொடுப்பது தவறானதாகும்.

குறித்த சொல்லுக்கான பொருட் கோடல் குறித்து சாட்சி விசாரணையின் போதே உரிய தீர்மாங்கள் எடுக்க வேண்டும்.

எனவே சந்தேக நபருக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றம் தீர்மானிக்கின்றது ' என நீதிபதி அறிவித்தே பிணை வழங்கியிருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.