(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்காக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  விசாரணைகளில் இருந்து தலமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார்.

இது குறித்த வழக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஆர்.எம்.சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கிலிருந்து தான் விலகிக் கொள்வதாக  தலைமை நீதிபதி அறிவித்தார்.

எவ்வாறாயினும்  இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவும், அந்த விசாரணைகளை முன்னெடுக்க  மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழாத்தை நியமித்துள்ளதாகவும் தலைமை நீதிபதி அறிவித்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, முல்லை தீவு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினரான சாந்தி சிரிஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ள நிலையில்,  மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று மன்றில் பிரசன்னமானார்.

முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதியின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்த விவகாரம் தொடர்பாகவே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.