இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலிளித்திருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பு விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக புரிந்துகொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதில் வெளிப்படுத்தியிருப்பதாகவும்; அமைச்சர் தெரிவித்தார்.

13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கைக்கு, இந்தியா 15 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்று பொய்யானதாகும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதி உதவி பேரம்பேசப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்;று விசேட செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வீடியோ கலந்துரையாடல் பற்றிய போலி தகவல்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், கடன்கள் பற்றியோ, அரசியல் அமைப்பு ரீதியான விடயங்கள் தொடர்பாகவோ இதன் போது கலந்துரையாடப்படவில்லை. மீனவர்கள் தொடர்பான நெருக்கடிகள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடை ஏற்படாத வகையில், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் நிதி உதவி தேவையாயின் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த அமைச்சர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான மாகாண சபை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர்: இந்த மகாண சபை இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்த திருத்தம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இப்பொழுதும் நடைமுறையில் உண்டு. இராஜாங்க அமைச்சரின் கூற்று அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. இதனை நீக்குவதாக பிரதமரோ ஜனாதிபதியோ ஒரு போதும் தெரிவிக்கவில்லை. இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர் அமுல்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறையை எமது அமைப்பு வரவேற்றது. அதனை இப்பொழுதும் நாம் வரவேற்கின்றோம். சில தமிழ் அமைப்புக்கள் தான் இதனை விமர்சித்தன.

அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல : இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 45 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தது. இது நாடுகளுக்கு இடையில் பொதுவான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. எந்த முரண்பட்ட விடயங்களும் இதில் இடம்பெறவில்லை, சுமுகமான நல்லுறவுடன் பேச்சுவார்த்தைகள நடைபெற்றன.

-அரசாங்க தகவல் திணைக்களம்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.