கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் வயல்வெளி பொங்கி கிடக்கும் ஊரில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 அக்டோபர் 23 இல் அஷ்ரப் எனும் ஆளுமை ஒரே புதல்வனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள். கல்முனைக்குடியில் வாழ்ந்து வந்த அஷ்ரப் தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும், கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றிய அஷ்ரப், முன்னாள் அமைச்சர் பேரியல் இஸ்மாயில் அவர்களை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமான் அஸ்ரப் எனும் ஓர் ஆண் மகன் உள்ளார்.

இவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் முஸ்லிங்களின் சார்பிலான தலைமை அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர், சட்டத்தரணி எனப் பன்முக ஆளுமை கொண்ட இவர் நான் எனும் நீ - கவிதை நூலின் சொந்தக்காரர். இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும், துறைமுகங்கள், மற்றும் கப்பல் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த அஸ்ரப் ஒலுவில் துறைமுகத்தின் உருவாக்குதலுக்கு ஆரம்ப விதையிட்ட தந்தையாவார்.

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலிலே விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து விட்டு விட்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது அரசியல் களத்தில் பாடுபட்ட ஒருவர் என்றால் மிகையாகாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் அவரே. கட்சியின் தலைவராக, அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணியாக, இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர், பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சேவை செய்த சிறந்த சமூக சேவகன்.

சிங்கள, தமிழ் சமூகத்தினருடனும் தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிய தலைவர் அஷ்ரப், இன உறவுப் பாலமாகவும் இருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை மேலும் நெருக்கமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். என்றாலும், அவர் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் செய்த சேவைகள் இன்றும் போற்றப்பட்டு வருகின்றன. அவர் எம்மை விட்டுச் சென்றாலும் அவரது அரசியல் பாசறையில் வளர்ந்த அரசியல்வாதிகள் அதனை அடிச்சுவடாகக்கொண்டு செயலாற்றி வருகின்றனரா என்ற கேள்வி இப்போதும் மக்கள் மத்தியில் இருக்கிறன்றது.

முஸ்லிம்களது அரசியல் உரிமைகளும் இருப்பிடமும் முக்கியமே தவிர, தன்னுடைய சொந்த நலன்கள் அல்ல எனத் தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். சமூகப் பிரச்சினைகள் வரும்போதுகூட தன்னுடைய அமைச்சுப் பதவிகளை த் தூக்கியெறிந்து ஆட்சியாளர்களுக்கு சவால்விட்டு முஸ்லிம் சமூகத்துக்கு பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் அவரே.

குறிப்பாக, பெரும்பான்மைக் கட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து எவருமே பேசாத சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவதாக எதிர்கொண்ட 1987ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் களத்தில் குதித்தது. அப்போது, தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ்விடம் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை அவர் ஒப்படைத்தார். தலைவர் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்தார்.

அவர் எப்போதுமே முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பிலுமே அதிக கவனம் செலுத்தினார். ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுடன் முஸ்லிம் சமூகம் கைகோத்திருப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டார். அதனை அவர் பல சந்தர்பங்களில் சாதித்தும் காட்டியிருந்தார்.

நாட்டின் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் அரசுக்கு எதிர்ப்புச் சக்தியாக இருப்பார்களாயின் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்தகால அரசியல் போக்கை வைத்து நிகழ்கால அரசியலுக்கான திட்டங்களை வகுப்பதில் அவரைப் போன்ற சிறந்த முஸ்லிம் தலைவர் எவருமே இருக்கமுடியாது.

அரசைப் பகைத்துக்கொண்டு தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என தலைவர் அஷ்ரப் கூறிய விடயம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு தற்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது. ஆகவே, தலைவருடன் நெருக்கமாக இருந்தவன் கட்சியை வளர்த்தவன் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கட்சித் தலைவர் காட்டிய வழிமுறையைப் பின்பற்றி செயலாற்ற வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது இணைந்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களுடைய எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காக வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் அல்லது கிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனி மாகாணசபை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்தார்கள். 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோஷமாக இதுவே முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.

2012ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு 2000ஆம் ஆண்டிலே திட்டமிட்டவர் அஷ்ரப் அவர்கள். நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக வளர்ச்சி கண்டு அதனூடாக அரசில் பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம்களின் அரசியல் பயணத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்குடனேயே தேசிய ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து 2012ஆம் ஆண்டு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது எங்கெங்கு ஆசனங்களை வெல்வது என்பவை தொடர்பில் இரவு பகலாக தலைவர் அஷ்ரப் அவர்கள் திட்டமிட்டார்கள்.

அவரது இந்த நடவடிக்கைகள் அத்தனைக்கும் அவரது கட்சிக்காரர்கள் பக்கபலமாகவே இருந்தனர். அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவை வழங்கி வந்தனர் எனினும், அவரது மறைவைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் கட்சி பிளவடைந்தது. இதனால் தலைவர் அஷ்ரப்பின் எதிர்பார்பு இலக்கு என்பவற்றை அவர்கள் அடையமுடியவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. தலைவரின் கனவு சிந்தனைகள் பிரதிபலிக்கப்பட வேண்டுமாயின் நாங்கள் எங்களுக்கிடையில் உள்ள பிளவுகளை மறந்து எல்லோரும் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டும். அவ்வாறான நிலை ஏற்படும்போது மாத்திரமே மீண்டும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தை எம்மால் ஆரம்பித்து தலைவரின் கனவை நனவாக்க முடியும். என்கின்றனர் முஸ்லிம் புத்திஜீவிகள்.

தலைவர் அஸ்ரப் அவர்களின் இலட்சியங்களில் ஒன்றான தென் கிழக்கு பல்கலைக்கழகம் இன்று மிகச் சிறப்பாக பல்லாயிரம் மாணவர்களை உள்வாங்கி கல்விப் பணியாற்றி வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி (அல்லது சிலர் பேசிக்கொள்வது போன்று கொல்லப்பட்டு) இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது அரநாயக்கவில் வபாத்தானார்.

இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக காத்தான்குடியில் வைத்து பிரகடனம் செய்து வைத்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான் பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சமூகத்தினுள் காட்ட முற்பட்ட போதும் முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அந்தஸ்தை எம்.எச்.எம்.அஷ்ரப் பெற்றுக்கொண்டார்.

எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான் 1989 இல் பாராளுமன்ற உறுப்பினரானவர் 2000ஆம் ஆண்டு வபாத்தானார் . இந்த காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு பலமான சக்தியாக ஒன்று திரட்டினார் ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம் செய்யவேண்டியதை ஒரு முஸ்லிம் அரசியல் வாதியாக மட்டும் இருந்து சாதித்தார் முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு சமூகம் என்பதை அங்கீகாரம் பெறச் செய்தார்.

இவற்றுக்கு இவரின் திறமையை மட்டும் காரணமாக கூறமுடியாது முஸ்லிம்களுக்கு எதிராக உருவாகி இருந்த அந்த சந்தர்பத்தை இவர் மிகவும் சிறப்பாக துணிவுடன் பயன்படுத்தினார் என்றுதான் கூறவேண்டும் அன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு தம்மை வழிநடத்தும் தலைவன் ஒருவனுக்காக பிராத்தனை செய்துகொண்டிருந்தது எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்று முஸ்லிம்கள் சிந்தித்து கொண்டிருந்தனர் இவற்றை இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுத்த தவறிவிட்டன இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுதியிருந்தால் பல முன்னேற்றங்களை இன்று கண்டிருக்கும் இந்த சந்தர்பத்தை அஷ்ரப் மிகவும் துணிவுடனும் திறமையுடனும் பயன்படுத்திக் கொண்டார் எந்த அரசியல்வாதி துணிவுடன், திறமமையுடனும் முஸ்லிம்களின் உரிமைகளையும் ,தேவைகளையும் ,விருப்பங்களையும் பெற்றுக்கொள்ள போராட முற்பட்டாலும் அவர்கள் அடையும் நிலையைத்தான் அஷ்ரப் அடைந்து கொண்டார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அஷ்ரப்பைப் பார்த்து பெரும்பான்மை கட்சி முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ‘இந்த சபைக்குள் நுழைந்த மிக மோசமான மிருகம் நீதான்’ என்று திட்டியுள்ளார்.

அஷ்ரப்பை நேசிக்காத அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் நேசிக்கத் தயாராக இல்லை என்பதை கண்டுகொண்ட பல முஸ்லிம் பெரும்பான்மை கட்சி அரசியல்வாதிகள் பின்னர் அஷ்ரப்பை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இவர் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் பல பிளவுகள் மத்தியிலும் வெற்றிநடை போடுகின்றது இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட கட்சியாக இன்று வளம் வருகின்றது என்பது சிறப்பானது ஆனால் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பெற்றுள்ளதா? என்பது விவாதிக்கப்படும் விடயமாக இருக்க இந்த கட்சி இஸ்லாமிய கோட்பாடுகளை கொண்ட கட்சியாக இல்லை என்பது இன்று பெரும் விமர்சனமாக உருபெற்றுள்ளது.

நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.