முன்மொழியப்பட்டுள்ள, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் சில பிரிவுகளில் இலங்கையில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறியும் உரிமைக்கான சுதந்திரங்களுக்கு தீங்கிழைப்பதாக இலங்கையின் ஊடக அமைப்புக்களின் நிபுணர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடக அமைப்பு, தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு என்பன இணைந்து இவ் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய நாம் அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில பிரிவுகள் தொடர்பாக கவனத்தை செலுத்தியுள்ளோம். குறிப்பிட்ட அந்த பிரிவுகள் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்திற்கு தீங்கிழைப்பதாக அமைகின்றது என்பது எமது நிலைப்பாடாகும்.

அரசியல் அமைப்பின் பிரிவு 14 தகவல் அறிவதற்கான உரிமையை (RTI) ஏற்று அங்கீகரித்திருக்கின்ற அதே நேரம் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சுயாதீன தகவல் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உரிமையை வலியுறுத்தி இருக்கின்றது. அத்துடன் அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கு பொது அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தக்கூடிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தல் வேண்டும். ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் ஒரேமாதிரியாக தகவலறியும் உரிமைச் சட்டத்தை 2017 ஆம் ஆண்டு தொடக்கம் பயன்படுத்தினர். இது தகவலறியும் உரிமையினை பயன்படுத்துவதில் இலங்கையை சிறந்த முன்மாதிரியாக மாற்றியுள்ளது. எனவே, நாட்டின் தகவல் அறியும் உரிமையின் செயற்பாட்டை பாதுகாக்கவும் மேலும் பலப்படுத்தவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

எவ்வாறாயினும், ஒரு தனியார் பத்திரிகையின் உரிமையாளர் அல்லது வெளியீட்டாளரை அல்லது ஒலி, ஒளிபரப்பாளரையும் எந்தவொரு அரச ஊடக அமைப்புப் போலவே, தேர்தல் ஆணைக்குழு வழங்கிய ஊடக வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்பதை வலியுறுத்தும் அதே நேரம் அந்த செயற்பாட்டை அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தில் மும்மொழியப்பட்டுள்ள 20 (3)(B) இல், 104B (5) (B) பிரிவை இரத்து செய்து திருத்தம் செய்வதற்கான மும்மொழிவை அவதானிக்க முடிகின்றது. இந்த விதி முன்னர் அரச ஊடகங்களுக்கு மட்டுமே பொருந்தியது.

தேர்தல் காலங்களில் இத்தகைய உத்தரவுகளுக்கு இணங்கவேண்டியது எப்போதும் தனியார் ஊடகங்களினதும் அரச ஊடகங்களினதும் கடமையாக இருக்கவேண்டும். தனியார் ஊடகங்கள் மீது அரசியலமைப்பு ரீதியாக கட்டாய கடமையை சுமத்துவது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படும் சுதந்திரமான பேச்சு மற்றும் வெளிப்பாட்டின் கொள்கைகளை மீறுகிறது. அரச ஊடகங்கள் வரி செலுத்துவோரின் பங்களிப்பால் பொது நிதியிலிருந்து நிதியளிக்கப்படுவதாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உச்ச நீதிமன்றத்தால் அடிக்கடி நினைவூட்டப்படுவது போன்று, கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட அலைவரிசைகளின் காரணமாக ஒளி, ஒலிபரப்பாளர்களைப் பொறுத்தவரையிலும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டியது உயர்கடமை பொறுப்பாகும்.

ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும், காவலாளியாகவும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாலும், குறிப்பாக முக்கிய அறிக்கையிடல் மற்றும் வர்ணனை மிகவும் தேவைப்படும் தேர்தல்களின் போது, 104B (5) (B) பிரிவின் உண்மையான உருவாக்கம் தக்கவைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. பிரிவு 104 B (5) (B), இப்போது இருப்பதைப் போல, அனைத்து அரச ஊடகங்களும் அந்தப் பிரிவின் எல்லைக்குள் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

மேலும் 20 ஆவது திருத்தத்தின் 27 ஆவது பிரிவு சரத்து 122 (1) (C) இற்கு திருத்தம் ஒன்றை பரிந்துரை செய்கின்றது. அந்தத் திருத்தத்திற்கமைய நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டு அவசர சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்தால், அத்தகைய மசோதவை 24 மணிநேரத்திற்குள் அல்லது குறிப்பிட்டுள்ளபடி மூன்று நாட்களுக்கு மேற்படாமல் நீண்ட காலத்திற்கு நிறைவேற்ற ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்தால், இந்த குறுகிய கால அவகாசம் ஒரு அவசர மசோதா பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் மற்றும் சாத்தியமான சட்ட சவாலுக்கு உட்படுத்தப்படும் நேரத்தை குறைக்கும் என்று நாங்கள் அஞ்சுகின்றோம். இதன் விளைவாக, பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவசர மசோதாவின் உள்ளடக்கங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளுக்கு இது வழிவகுக்கும்.

மேலும், அரசியலமைப்பு பேரவையை இல்லாதொழித்து அதற்கு பதிலாக சிவில் சமூக பிரதிநிதித்துவம் இல்லாத பாராளுமன்ற  கவுன்சிலை ஏற்படுத்துவது தொடர்பாக  தகவல் அறியும் ஆணைக்குழு உள்ளடங்களாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் உண்மையான நிலையை பாதிப்பதாக அமைகின்றது என்பதை அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்த மும்மொழிவுகளில் அவதானிக்க முடிகின்றது.

மேலே குறிப்பிடவற்றிற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகம், பிரதமரின் செயலாளர் அலுவலகம் மற்றும் 50% இற்கும் அதிகமான அரச பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் போன்றன கணக்காய்வாளர் நாயகத்தின் பரிசோதனைகளிலிருந்து விலக்களிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் செயல்முறை தொடர்பாக வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை இது பாதிக்கின்றது என்றும் ஊடகங்கள் இவை தொடர்பாக அறிக்கையிடுவதனையும் தடுக்கின்றது என்று நாம் உணர்கின்றோம்.

இதுபோன்ற அடிப்படை மாற்றங்கள் இலங்கையின் ஜனநாயக மற்றும் முற்போக்கான நிறுவனங்களை எதிர்மறையாக பாதிக்கும் விடயங்களை கொண்டுள்ளன என்பதை அவதானிக்கின்றோம். அதனால் அரசியலமைப்பு கோட்பாட்டின் அடிப்படையான அம்சம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்படுகின்ற 20 ஆவது திருத்தத்தில் மேற்கூறிய உட்பிரிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.