மாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்பட்டு அதிகாரங்களை பகிர்வதன் மூலமே நிரந்தர சமாதானத்தையும் நிலையான அபிவிருத்தியையும் எட்ட முடியுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று கனேடிய உயர்ஸ்தானிகர் டெவிட் மெகினனுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் வலுவூட்டப்படுவது மாத்திரமின்றி மாகாண சபை தேர்தல்களும் அவசரமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

மாகாண சபை செயலிழந்ததனால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்குகள் குறித்து, அவர் பல்வேறு உதாரணங்களுடன் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாகாண சபை நிர்வாகம் இல்லாததால் அதிகாரிகள், மக்களை அலட்சியப்படுத்துகின்றனர். மக்களின் தேவைகளை இனங்கண்டு செய்வதற்கு பின்னடிக்கின்றனர். அதுமாத்திரமின்றி மாகாண சபை இயங்காத காரணத்தினால் ஆளணிப் பற்றாக்குறை பல நிறுவனங்களில் ஏற்பட்டு இருக்கின்றது.

உதாரணமாக, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நீண்டகாலமாக மூடப்பட்டு இருக்கின்றது.

முன்னர் இந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 19 பேர் கடமையாற்றினர். தற்போது 11 பேரை மாத்திரமே கொண்டு வைத்தியசாலை இயங்குவதால் நோயாளர்கள் பெரிதும் தவிக்கின்றனர். உரிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது என அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனேடியப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு ஒன்றை மட்டக்களப்பில் அமைத்துத் தர வேண்டுமென உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அகமட், அதன்மூலம் கிழக்கிலிருந்து கனடாவுக்குச் சென்று உயர்கல்வி கற்க ஆர்வம் உள்ளவர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தினால் கனடாவுக்கு செல்ல முடியாமல் இருக்கும் இந்த மாணவர்களுக்கு இந்த முயற்சி பெரிதும் உதவுமெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்ய, கனடா ஆக்கபூர்வமான உதவிகள் வழங்குவது பற்றியும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.