மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் பாக்கிர் மாக்கார் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது,

“டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது பெயரை, தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமாணி அறிவித்தலில் வெளியிட்டிருந்ததோடு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பி வைத்திருந்தது.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், குட்டி மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்து. அவர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார். அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு நாடாளுமன்றில் இடமளிக்க முடியாதெனக் கூறி, அப்போதிருந்த சபாநாயகர் பாகிர் மாகார், சிறந்த முன்னுதாரணம் ஒன்றை வழங்கியிருந்தார்.

“ஆனால், அந்த முன்னுதாரணத்தை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள அனுமதியளித்திருந்தீர்கள். அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைகளை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்திருந்தீர்கள். ஏன் இப்படித் தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறீர்கள்? இதனூடாக நீங்கள் அரசமைப்பை மீறியிருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, “இந்த விவகாரம் தொடர்பில், நீங்கள் நீதிமன்றிலேயே விவாதிக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பின் அடிப்படையிலேயே நான் செயற்பட்டிருக்கிறேன்” என்றார்.

நீதிமன்றம் தொடர்பிலும் நீதிபதிகள் தொடர்பிலும், தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாம் அதனைப் பற்றிக் கலந்துரையாடப் போவதில்லை. சபாநாயகர், அரசமைப்பை படிக்க வேண்டுமெனவும் தெரிவித்ததோடு, சபாநாயகருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியவர்கள், அரசமைப்பின் 89, 91 உறுப்புரிமைகளைப் படிக்காது ஆலோசனை வழங்கியுள்ளார்கள் எனவும் சாடினார்.
Jaffna Muslim

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.