(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஆறுமுகம் தொண்டமான் மறைந்துவிட்டார் என்பதற்கான எமது மலையக மக்களின் பயணம் முடிந்துவிட்டதென நினைக்கவேண்டாம் மலையக மக்களுக்கு பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நிச்சயமாக  வடக்கு கிழக்கிலே எமது மக்களும் நாமும் மலையக மக்களுடன் நிற்போம், அவர்களுடன் பயணிப்போம், அவர்களுக்காக குரல் கொடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சபையில் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தல் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில் கூறியதானது,

ஆறுமுகன் தொண்டமானும் நானும் கொழும்பு ரோயல் கல்லூரியில் 1982ஆம் ஆண்டு ஒன்றாக கல்வி பயின்றவர்கள். 1982ஆம் ஆண்டு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற நான்கு பேர் இன்று பாராளுமன்றில் உள்ளோம். ஆறுமுகன் தொண்டமான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகுவதற்கு முன்னரே அவரை எனக்குத் தெரியும். கூட்டு ஒப்பந்தம் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் மேன்முறையீட்டு நீதிமன்றில் இ.தொ.காவுக்காக ஆஜராகியிருந்தேன்.

அதேபோன்று உயர்நீதிமன்றில் தமிழ் இளைஞர்கள் கொழும்பிலும், மலையகத்திலும் அதிகமாக கைதுசெய்யப்பட்டிருந்த சந்தர்ப்பதில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் ஆறுமுகன் தொண்டமானால் தாக்கல் செய்யப்பட்டது. அத்தருணத்தில் அவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருந்தார். இந்த இக்கட்டான நிலையிலிருந்து இளைஞர்களை நாம் விடுத்திருந்தோம்.

பொலிஸாரும் பாதுகாப்பு படைகளும் தோட்டப்புறங்களுக்குள் பின்னர் ஆறுமணிக்கு பின்னர் உள்நுழைவதை தடுக்கவும், மக்களின் அனுமதியுடன் செல்லவும் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்த சந்தர்ப்பத்தில் நான் அவரின் அழைப்பில் ஆஜராகியிருந்தேன். பல தோட்ட இளைஞர்கள் பதிக்கப்பட்ட போது அதற்கு எதிராக அவர் குரல்கொடுத்திருந்தார். தொண்டமானுடைய பரம்பரை பற்றி அனைவரும் பேசினர். அதனை நிராகரிக்க முடியாது. சௌதியமூர்த்தி தொண்டமானிடம் நான் ஆட்டோகிராப் ஒன்றை பெற்றுள்ளேன். 1977ஆம் ஆண்டு புதிய பாராளுமன்றம் திறந்த போது,  நான் ஒரு சாரணராக பாராளுமன்ற நிகழ்வு வந்திருந்த தருணத்திலேயே அவரிடம் " ஆட்டோகிராப்" பெற்றிருந்தேன்.

அவர் தமது சமூகத்திற்காக பெரும் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எவ்வாறு செயற்பட்டாரென நாம் அறிந்துள்ளோம். 1949ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் முற்பட்ட போது அதற்கு ஆதரவாக ஜி.ஜி.பொன்னம்பலம் செயற்பட்ட போது தந்தை செல்வநாயகம் அதற்கு எதிராக செயற்பட்டதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை உருவாக்கியிருந்தார்.

ஆகவே, குறுகிய காலத்திற்குள் அந்த மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட அந்த சோகமான சம்பவத்துடன் எமது கட்சிக்கு நெருங்கிய தொடர்புள்ளது. 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட போது அதனை தலைவர்களில் ஒருவராக சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்ந்தார். என்றாலும் 1977ஆம் ஆண்டு ஜே.ஆர். அரசாங்கம் உருவாக்கபட்ட போது ஏனைய தலைவர்களின் அனுமதியுடன் அவர் அமைச்சரானார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்;லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த போது அதற்கு எதிராகவும் செயற்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அவரின் பணியை ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்தார். அவரின் இழப்பை கண்டு நாம் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தோம். கொட்டகலைக்கு நான் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்காக மக்கள் அழுவதை கண்டேன். எங்களுடைய அனுதாபங்களை ஜீவன் தொண்டமான், மற்றும் அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறார். சம்பந்தன் இந்த அனுதாப் பிரேரணையில் கலந்துகொள்ள முடியாத சூழலில் உள்ளதாக என்னிடம் தெரிவித்ததுடன், தமது அனுதாபங்களை தெரிவிக்குமாறும் கூறியிருந்தார் என்றார்.

சபையில் உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி கூறுகையில்,

மலையக மக்களுக்கான வாழ்விடங்களும் உரிமைகளும் இந்த நாட்டில் நிராகரிக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்களாக மாத்திரம் இந்த சமூகம் கணிப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செமளிமூர்த்தி தொண்டமானும், ஆறுமுகன் தொண்டமானும் சமூகத்தின் இருப்பை தக்கவைப்பதற்காக செயற்பட்டிருந்தனர். சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கு முன்னர் பல தலைவர்கள் இந்த மண்ணில் தமது உரிமைகளுக்காக போராடியிருந்தனர்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் வழிநடத்தில் ஆறுமுகன் தொண்டமான் தமது சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணித்திருந்தார். 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவதிற்காக கொழும்பு, மலையகம் உட்பட நாடு முழுவதும் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டனர். அத்தருணத்தில் பல மலையகத் தமிழர்கள் வன்னி, முல்லைத்தீவு பகுதிகளில் குடியேறினர். தொண்டமான் நகர் என்ற கிராமமொன்று இன்றும் கிளிநொச்சியில் உள்ளது.

ஈழ தேசத்தின் எழுச்சிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் அதனை சௌதியமூர்த்தி தொண்டமான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், பிரபாகரனுடன் இணைந்து செயற்படவில்லையென சிலர் குறிப்பிட்டுள்ளனர். இது பொய்யானதாகும். ஈழத்தில் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்ககும் நிம்மதியாக வாழ்வதற்கும் ஒத்துழைப்புகளை இரண்டு தலைவர்களும் வழங்கியிருந்தனர். 2001ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வருகைதந்து பிரபாகபரனுடன் ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக பேசியிருந்தார்.

அவருடைய காலத்தில் ஈழ போராட்டத்தை அங்கீகரத்திருந்தார். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட போது தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தகனர்;. மலையக மக்களும் மலையகத் தமிழர்களும் ஒருகாலத்திலும் ஈழ விடுதலைப் போராடத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கவில்லை. இந்த தருணத்தில் அவரின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உரையாற்றுகையில்,

மலையக மக்களின் விடிவெள்ளியாக இருந்தவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான். அவருடனான பழக்கம் எனக்கு இன்றும் நினைவிற்கு வருகின்றது. மலையக மக்களின் பிரச்சினைகளில் தானே முன்வந்து தீர்வு காண்பவராக இருந்தார். அந்த பொறுப்பு இன்று ஜீவன் தொண்டமானிடம் சுமத்தப்பட்டுள்ளது. உங்களின் தந்தையும் பாதையில், பூட்டனாரின் பாதையில் நீங்களும் பயணித்து, சுமையை கஷ்டமாக நினைக்காது எமது மக்களுக்கு செய்யும் சேவையாக கருதி செயற்பட வேண்டும் என்பதே உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை.

அதுமட்டுமல்ல மலையக மக்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும் நிலையில் நிச்சயமாக  வடக்கு கிழக்கிலே எமது மக்களும் நாமும் உங்களுடன் நிற்போம், உங்களோடு பயணிப்போம், உங்களுக்காக குரல் கொடுப்போம்.  எனது நண்பனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் மலையக மக்களின் வாழ்கையை கவனத்தில் கொண்டு அவர்களின் இறையாண்மையை அவர்களுக்கு எடுத்துக்கொடுக்க வேண்டும்.

நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், இந்த சுமையை உங்களுடன் சேர்த்து சுமக்க வடக்கு கிழக்கு மக்களும் நாங்களும் தயாராகவே உள்ளோம்.  எமது உறவுகள் தமது தலைவனை இழந்துவிட்டோம், இனி பயணம் முடிந்துவிட்டதென  நினைக்கவேண்டாம், உங்களின் உறவுகளாக நாம் இருக்கின்றோம், எந்தவித அச்சமும் இல்லாது பயணியுங்கள் உங்களின் பின்னால் நாம் வருவோம் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.