அயோத்தியில் கோயிலா மசூதியா என்ற விவாதம் முடிவடைந்து விட்டது. ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும் செய்யப்பட்டு விட்டது.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி தாமே பங்கேற்றார். அதனையடுத்து, பிரமாண்டமான கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (சிபிஆர்ஐ) ரூர்க்கி, ஐஐடி மெட்ராஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றின் பொறியாளர்கள் மண்ணை ஆய்வு செய்து கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கூறப்படுகிறது.

கோயிலின் கட்டுமானப் பணிகள் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

கோயிலின் வரைபடமும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூட்டம் ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மறுபுறம், மசூதி கட்டும் பணியும் வேகம் பிடித்துள்ளது. ஐந்து ஏக்கர் நிலத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை சுன்னி வக்ஃப் வாரியம் உருவாக்கியது.

இந்த ஐந்து ஏக்கர் நிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று முடிவு செய்யும் பொறுப்பு இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம், அயோத்தி வழக்கில் தனது தீர்ப்பை வழங்கியபோது, ​​ராமர் கோயிலுக்கு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, மசூதிக்கு ஐந்து ஏக்கர் இடத்தை வழங்குமாறு உத்தர பிரதேச அரசுக்கும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அயோத்தி அருகே தன்னிபூர்(Dhannipur) கிராமத்தில் மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த நிலம் வேளாண் துறையின் 25 ஏக்கர் பண்ணை இல்லத்தின் ஒரு பகுதியாகும்.

தற்சமயம் இந்த இடத்தில் தானியம் நடவு செய்யப்பட்டது. இப்போது இங்கே ஒரு தர்கா உள்ளது. இந்த இடம் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இருப்பினும், அயோத்தியின் பல முஸ்லிம்களும் இந்தச் சர்ச்சையில் ஒரு சார்புள்ள பலரும் இவ்வளவு தொலைவில் நிலம் வழங்கப்பட்டது குறித்தும் மசூதி கட்டப்படுவது குறித்தும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


பேராசிரியர் எஸ்.எம். அக்தர் என்பவர் யார்?

இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை, மசூதியை வடிவமைக்கவுள்ள கட்டடக் கலைஞரின் பெயரை இறுதி செய்துள்ளது. இந்தப் பணிக்கு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.எம்.அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் அக்தர் ஜாமியாவில் உள்ள கட்டடக்கலைத் துறையின் தலைவராகவும் உள்ளார். முப்பது ஆண்டுகளாக இந்தத் துறையுடன் தொடர்புடைய இவர், இந்தோ-இஸ்லாமிய வரைபடங்களை வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்றவர்.


இந்த பொறுப்பைப் பெற வேண்டி எந்த விண்ணப்பம் செய்யவில்லை என்று இவர் தெரிவித்தார். தனது பணித் திறமையின் அடிப்படையில் மட்டுமே தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இவர் கூறுகிறார்.

ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதியுடன் வேறு என்ன கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது குறித்தும் அதன் வடிவமைப்பு குறித்தும் தயார் செய்து கொடுக்குமாறு செப்டம்பர் 1 ம் திகதி அன்று தான் தொலைபேசியில் இவருக்குத் தகவல் வந்துள்ளது.

இஸ்லாமிய கலை மற்றும் கட்டடங்கள் தொடர்பான சர்வதேச மாநாடு 2007 முதல் உலக அளவில் நடந்து வருகிறது.

இது ஈரான், பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது டெல்லியில் மூன்று முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த அந்த மாநாட்டின் கன்வீனராக பேராசிரியர் அக்தர் இருந்துள்ளார். இதன் காரணமாக, அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் தம் பணிகளைப் பற்றி அறிந்து கொண்டிருக்கலாம் என்று பேராசிரியர் அக்தர் கூறுகிறார்.

பேராசிரியராவதற்கு முன், தாம் பல நிறுவனங்களில் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார். அவர் ஜாமியாவிலேயே பல கட்டடங்களையும் வடிவமைத்துள்ளார்.

லக்னோவைச் சேர்ந்த பேராசிரியர் அக்தர் இந்திய கட்டடக் கலைஞர்கள் உத்தரபிரதேச பிரிவின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்துள்ளார் என்பதுக் கூடுதல் தகவல்.


மசூதியின் வரைபடம் எப்படி இருக்கும்?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலின் பிரம்மாண்டம் குறித்து எல்லா இடங்களிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா, விஸ்வ இந்து பரிஷத்துடன் இணைந்து, ராமர் கோயிலின் மாதிரியை வடிவமைத்துள்ளார், இப்போது அதில் சிறிய மாற்றத்துடன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மசூதியின் வரைபடம் அதே அளவு பிரமாண்டமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், 'கட்டட வடிவமைப்பு என்பது ஒரே மாதிரியாக அமைக்கப்படுவதில்லை என்பது எங்கள் தொழிலில் ஒரு முக்கிய அம்சம். காலப்போக்கில் அது வளர்ச்சியடைகிறது. அழிந்து போனவை தொல்லியலாக மாறுகிறது. நிலைத்திருப்பவை கட்டடக் கலையாக மிளிர்கிறது. சமகாலத்தவை எதுவும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருக்கும். அப்படித் தான் வடிவமைப்போம். இந்தச் சிந்தனையுடன் இருக்கும்போது, ​​நாம் பல புதிய விஷயங்களை உருவாக்குகிறோம், பழைய விஷயங்கள் மனதை விட்டு விலகுகின்றன. இது உலக நடப்பாக உள்ளது.' என்று பேராசிரியர் அக்தர் கூறுகிறார்.

அதாவது, புதிய மசூதியின் அமைப்பு பழைய பாபர் மசூதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமா? இது குறித்து பேராசிரியர் அக்தர், புதிய மசூதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெளிவாகக் கூறுகிறார். அதில் குவிமாடம் எதுவும் இருக்காது என்று அவர் தெரிவிக்கிறார்.

அப்படியானால், இது தொடர்பாக சுன்னி வக்ஃப் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளாரா? இது குறித்து அவர் கூறுகையில், வடிவமைப்பில் பணியாற்றுவதற்கு முன்பு யாரிடமிருந்தும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று விளக்குகிறார். இதுபோன்ற பல புதிய கருப்பொருள்கள் ஐரோப்பாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. அங்கெல்லாம், மசூதி 'ஜீரோ எனர்ஜி'யில் இயங்குகிறது. அதாவது அனைத்துமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

பேராசிரியர் மேலும் கூறுகையில், தற்சமயம், மசூதியின் வடிவமைப்பு குறித்த எந்தத் திட்டமும் தன் மனதில் இல்லை எனவும் சிந்தனைக் கட்டத்தில் தான் இருப்பதாகவும் கூறுகிறார். உறங்கும் போதும் விழித்துக் கொண்டிருக்கும் போதும் இதே சிந்தனை அவர் மனதை ஆக்கிரமித்தால் தான் பணியைத் தொடங்க முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.


இந்திய உணர்வின் உதாரணம்


ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி மட்டுமே கட்டப்படாது என்றும் ஒரு முழுமையான வளாகத்தை கட்டும் திட்டம் உள்ளது என்றும் அதில் மசூதி ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வளாகத்தின் கருப்பொருள் 'கிட்மத்-இ-கல்க்', அதாவது மனிதகுலத்திற்கான சேவை என்ற பொருளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புதிய மசூதியின் வடிவமைப்பில் இஸ்லாமிய தன்மையுடன், பாரதிய அடையாளமும் விரவியிருக்கும் என்று பேராசிரியர் தெரிவிக்கிறார். இதன் மூல மந்திரம் மானிட சேவை என்பதாகவே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். மக்களுக்கு உதவுவதன் மூலமே இதை நிறைவேற்ற முடியும் என்று கூறும் அவர், சில உதாரணாங்களையும் முன்வைக்கிறார். சிலருக்கு சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால், அவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு மருத்துவமனை வசதிகளை வழங்க முடிந்தால், அது மனிதகுலத்திற்கான ஒரு சேவையாகும். கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கற்க வழி வகை செய்தால், அது மனிதகுலத்திற்கான ஒரு சேவையாகும். இது போன்ற சேவைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த வளாகம் குறித்து எழுப்பப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

இதன் காரணமாக, வளாகத்தில் ஒரு மருத்துவமனையும் இருக்கும், கற்பித்தலுக்கான வாய்ப்பும் இருக்கும், ஆனால் இது ஒரு பள்ளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லை என்றும் வரலாற்றை எடுத்துரைப்பதும் கல்வி தான் என்றும் கூறப்படுகிறது. இன்றைய சமுதாயத்தில், அதிகரித்து வரும் மனிதர்களுக்கிடையிலான இடைவெளியை இந்த வளாகம் குறைத்து, மக்களை ஒன்றிணைக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், மசூதியின் திட்டம் எப்போது தயாராகும் என்று அவர் உறுதியாகச் சொல்லவில்லை. மசூதியின் பெயர் என்ன, அடிக்கல் நாட்டு விழாவிற்கு யார் யார் அழைக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

ஆனால், இறுதியாக அவர், இந்த மசூதியின் வடிவமைப்பை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம் என்றும் இதன் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து, தாம் மிகவும் பெருமை கொள்வதாகவும் உலகமே கண்டு வியக்கும் வகையில் இதைச் செய்ய முயலப்போவதாகவும் கூறினார்.

(நன்றி - பிபிசி தமிழ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.