சவுதி அரேபியா இராணுவ அமைச்சகத்தில் ஊழல் செய்த புகாரின் பேரில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் 2 பேரை மன்னர் சல்மான் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. 84 வயதான சல்மான் பின் அப்துல் அஜீஸ் மன்னராக இருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசராக நியமித்தார்.

பழமைவாத நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு இருந்து வந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கி அவர்களுக்கு சம உரிமையினை முகமது பின் சல்மான் வழங்கி இருந்தார். இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் விமர்சனத்தினை ஏற்படுத்தியது.

அந்த வகையில் பெண்கள் வாகனம் ஓட்ட, விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல, வெளிநாடுகளுக்கு தனியாக சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க சவுதி அரேபிய அரசில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகவும் முகமது பின் சல்மான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் காரணமாக சவுதி மன்னராக சல்மான் இருந்தாலும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே சவுதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராக கருதப்படுகிறார். முகமது பின் சல்மானின் அதிரடி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.

2018-ல் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது, கனடாவில் வசித்து வரும் சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொல்ல திட்டமிட்டது ஆகியவற்றில் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனிடையே சவுதி மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அகமது பின் அப்துல் அஜிஸ் மற்றும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் 3 பேர் கடந்த மார்ச் மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. எனினும் இளவரசர் முகமது பின் சல்மான் அரச அதிகாரத்தில் தனது பிடியை இறுக்கிக் கொள்வதற்காகவே உயர்மட்ட அளவிலான கைதுகள் நிகழ்த்தப்படுகின்றன என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் யெமனில் சண்டையிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கட்டளை தளபதியாக இருந்த இளவரசர் பகாத் பின் துர்க்கி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபியாவின் வட மேற்கு பிராந்தியமான அல் ஜூப் ரெஜியோவின் துணை ஆளுநராக இருந்த பகாத் பின் துர்க்கியின் மகனும் இளவரசருமான அப்துல்லா அஜிஸ் பின் பகாத்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சவுதி இராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கு இடமான நிதி பரிவர்த்தனை நடந்ததில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இளவரசர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.