ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் நேற்று (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார்.

நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும்.

பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர். வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அது பொது நலனை நோக்கமாகக்கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த வேண்டும். அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக அது முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மழை காலங்களில் நகரங்கள் நீரினால் நிரம்பும் பிரச்சினை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதுபற்றி தனது கருத்தை தெரிவித்த ஜனாதிபதிஇ 'சிறு மழைக்கும் கொழும்பு நீரினால் நிரம்புகின்றது. நாம் அதற்கு நிலையான தீர்வொன்றை அறிமுகப்படுத்தினோம். கடந்த ஐந்து வருடங்களில் அது செயற்படுத்தப்படவில்லை. பிரச்சினை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. பொறுப்புக்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் தீர்வு வெற்றியடையாமைக்கு காரணமாகும்' என்று கூறிய ஜனாதிபதி அவ்வாறான பலவீனங்களை களைந்து பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

ஔடத துறை பற்றி கவனத்தை செலுத்திய ஜனாதிபதிஇ மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஔடத சட்டத்தை மறுசீரமைப்பது பற்றியும் கலந்துரையாடினர். மருந்து இறக்குமதியை முறைமை படுத்துவதற்கும் அதற்காக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 'எமது நாட்டில் தேவைக்கு மாத்திரமன்றி வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டும் மருந்து உற்பத்தியை மேற்கொள்ள எமக்கு முடியும். அதற்காக முதலீட்டாளர்களும் தயாராக உள்ளனர். இந்த இலக்கை அடைந்துகொள்வது நாடு அடையும் பாரிய வெற்றியாக வரலாற்றில் பதியப்படும்' என்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்காக சிவல் பாதுகாப்பு குழுவொன்றை ஸ்தாபித்து போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மிகவும் செயற்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அரச சேவையின் செயற்திறனை அதிகரித்து அபிவிருத்தி செயற்பாட்டுக்காக தொடர்ச்சியான பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். ஒரு சில அதிகாரிகள் தீர்மானங்களை எடுப்பதற்கு பயப்படுகின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும். அரச சேவையை செயற்திறன்மிக்கதாகவும் முறைமைப்படுத்துவதற்கும் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
10.09.2020


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.