(எம்.மனோசித்ரா)

அமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20 ஐ உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் ' 20 யாருக்கு ? - 20 யாருடையது ? ' என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டிலேயே டில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அதிகார ஆசைக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அறிவுபூர்வமான செயல் என்று கூற முடியாது. இது ஜனாதிபதியினுடைய பலவீனமாகும். அதன் காரணமாகவே தனது சகோதரரான பிரதமருக்கு கூட அதிகாரங்களைக் கொடுக்க விரும்பவில்லை.

ஜனாதிபதி கோத்தபாய தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார். 20 ஐ நிறைவேற்றி அனைத்து அதிகாரங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டதன் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். நாட்டிலுள்ள தேசிய சொத்துக்கள் விற்கப்படும்.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி 20 ஆவது திருத்த சட்டம் அச்சிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் முதலாம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செப்டெம்பர் 2 ஆம் திகதியே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கும் போது இவ்வளவு அவசரமாக ஏன் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது?

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக அரும்பாடுபட்டவர்களே தற்போது 20 ஐ எதிர்க்கின்றனர். எனினும் ஆளுந்தரப்பினரின் இந்த எதிர்ப்பு பிரயோசனமற்றது. விமல் வீரவன்ச போன்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மாத்திரமே குரலை உயர்த்தி பேசுகின்றனர். அமைச்சரவையில் எந்த எதிர்ப்பையும் வெளியிடுவதில்லை.

உரிமையாளர் யாரென்று கூறுவதற்கு அச்சப்படும் வகையில் 20 ஆவது திருத்தம் அமைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் பக்கத்தில் பார்க்கும் போது 20 இன் உரிமையாளராக உள்ளார். எனினும் அவருக்கு பின்னாலுள்ள 20 இன் உரிமையாளர் ஐக்கிய அமெரிக்காவாகும்.

20 ஆவது திருத்தத்தினால் மக்களுக்கோ , பாராளுமன்றத்திற்கோ அமைச்சர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. மாறாக இதன் அனைத்து பயனும் ஜனாதிபதியை மாத்திரமே சென்றடையும். அமெரிக்காவுக்கு ஏற்றாற்போல செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20 ஐ உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.