இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு நேற்று (26) நடைபெற்றது.

காணொளி வாயிலாக இந்திய பிரதமர் மோதியும், இலங்கை பிரதமர் மஹிந்தராஜபக்ஷவும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இலங்கை, இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மானிய உதவி வழங்கப்படும் என இந்திய ரிரதமர் மோதி அறிவித்துள்ளார்.

இத்தகவலை இந்திய வெளியுறவுத் துறையின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவு இணைச் செயலாளர் அமித் நரங் தெரிவித்தார் என்று இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியா வசதி செய்யும். இதற்காக உத்தரப்பிரதேசத்தின் குஷி நகருக்கு முதல் விமானம் இயக்கப்படும்.

இருதரப்பு நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் இலங்கையும் செயல்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்கும், கொரோனா தொடர்பான இடையூறுகளைச் சமாளிப்பதற்கும், இந்தியா 400 மில்லியன் டாலர் பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கி உள்ளது.

தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த மெய்நிகர் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் தலைவர்கள் மட்டத்தில் அதிக அளவு அர்ப்பணிப்பு உள்ளதை காட்டுகிறது.

சில பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும், இதன்மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கும் பொது மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்றும் பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முக்கிய சின்னமான யாழ்ப்பாண கலாச்சார மையம் குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறப்புக் குறிப்பை வெளியிட்டார். இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதால், அதனை திறந்து வைக்க வரும்படி பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அழைப்பு விடுத்தார்.

தமிழர்களின் எதிர்பார்ப்புகளான சமத்துவம், நீதி,,அமைதி, கவுரவம் ஆகியவற்றை உணர்ந்து இலங்கையின் புதிய அரசு செயல்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோதி கேட்டுக்கொண்டார்  என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.