"19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்குவது ஜனநாயக விரோத செயல்.  இதை விடுத்து 2/3 பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை  முன்னெடுக்க வேண்டும்" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"அரசியலமைப்பு ஒரு சமூக ஒப்பந்தம். நாட்டிலிருக்கும் அனைத்து மக்கள் கூட்டங்களும் தமக்கிடையே, தமக்குள் செய்து கொள்ளும் ஒரு புரிந்துணர்வு. எப்படி நாம் வாழப் போகிறோம்? எப்படியான ஆட்சி முறையை நாம் கொள்ளப் போகிறோம்? நாட்டிலிருக்கும் வேறுபட்ட மக்கள் குழுக்கள் எப்படி இணங்கிச் செயற்படப் போகிறோம்? ஜனநாயக அமைப்புக்கள் எப்படியாக இயங்கப் போகின்றன? என்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதே அரசியலமைப்பாகும். 

இப்படி எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியலமைப்பு இல்லாததே இலங்கையின் தேசிய பிரச்சினைக்குக் காரணமாகும். பேரினவாத சிந்தனையின் அடிப்படையில், எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களை புறந்தள்ளி, ஒதுக்கி, அவர்களது விருப்பங்களுக்கு முரணாகத் தமக்கு வேண்டியதை மட்டும் சாதிக்கும் அரசியலமைப்புக்களை தொடர்ச்சியாகப் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மைகளின் மேல் திணித்ததாலே தான் இனப் பிரச்சினை தோன்றியது. எண்ணிக்கையில் குறைவென்ற ஒரே காரணத்துக்காக தமது இறைமையை விட்டுக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இந்த நாட்டில் இத்தனை ஆயிரம் உயிர்களை பலி கொடுக்க வைத்தது. 

கிடைத்திருக்கும் 2/3 பெரும்பான்மையை நாட்டின் அனைத்து மக்களின் நன்மைக்கென்று பயன்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை இந்த அரசாங்கத்திற்குண்டு. அனைத்து மக்களும் இணங்கக் கூடிய அரசியலமைப்பு உருவாக்கத்தை இந்த அரசாங்கம் முன்னெடுக்குப் பட்சத்தில் அந்த செயலுக்கு எமது ஆதரவு நிச்சயம் இருக்கும். எண்ணிக்கையில் சிறுபான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இணங்கும் அரசியலமைப்பை உருவாக்குவதே நாட்டிற்கு உகந்தது. இந்த நாடு இங்கு வாழும் அனைவருக்கும் சொந்தமானது என்பதை அரசியலமைப்பு ஒப்பந்தம் உறுதிபடக் கூற வேண்டும். இதைச் செய்யாவிடின் நாடு மீண்டும் அதல பாதாளத்திற்கே செல்லும்" என்றும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.