உலகப் புகழ்பெற்ற தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு இசைத் துறைக்கு பெரும் இழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எஸ்.பி.பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என பல மொழிகளில் சுமார் 42,000 க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடி கொடுத்தவர். 

திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

தம்மிடம் உதவி என்று யாரும் கேட்டு வந்தால் மறுக்காமல் தம்மால் முடிந்த உதவியை செய்து கொடுக்கக் கூடிய தாராள மனம் கொண்டவராக எஸ்.பி.பி. திகழ்ந்தார். 

எல்லா மத நம்பிக்கை கொண்டவர்களையும் மதிக்கும் மாண்பு நிறைந்தவராக அவர் வாழ்ந்தார்.

இந்திய தேசிய விருது,  தமிழக அரசின் கலைமாமணி விருது. பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, நந்தி விருது, “ஹரிவராசனம்” விருது, இந்திய திரைப்பட பிரமுகர் விருது என்பன போன்ற அதி உயர் விருதுகளை இந்திய அரசு எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வழங்கி கௌரவப்படுத்தி இருப்பது அவரது இசை வாழ்வுக்கு கிடைத்த அங்கீகாரம்.

அவர் விரைவில் பூரண சுகம் பெற்று பழைய படி பாட வேண்டும் என்று இலங்கை வாழ் ரசிகர்கள் உட்பட அவரது அனைத்து ரசிகர்களும் அவருக்காக பிரார்த்திருந்தனர். என்றாலும் இறைவனது நாட்டம் அவர் உயிர் பிரிந்து விட்டது.

அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

அவரின் பிரிவால் கவலைப்படும் அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் உலக வாழ் ரசிகர்கள் அனைவருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.