கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தமிழக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தமிழக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பிரபல நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகாந்தின் உடல் நிலை சீரடைந்துவருவதாக தமிழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14 ஆம் திகதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்பிபி சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் கூறியவதாவது,

எஸ்பிபி நலமாக இருக்கிறார் எனக் கூறமுடியாது. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை ,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழகத்தின் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு, கொரோனா வைரசு தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கடந்த இரு நாள்களுக்கு முன்பு தமிழக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விஜயகாந்தின் உடல் நிலை குறித்து அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது விஜயகாந்துக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. அதன் தொடர்ச்சியாக, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.