(எம்.மனோசித்ரா)

நாட்டில் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்ற போதிலும், பல பகுதிகளிலும் கிளைக் கொத்தணிகள் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் பல உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் கவனயீனமாகச் செயற்பட்டால் விரைவில் சமூகப்பரவலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், நாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் உறுதியாகக் கூற முடியும். அதற்கான உறுதிப்படுத்தல்கள் எம்மிடமுள்ளன. ஆனால், சில பகுதிகளில் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே, கிளை கொத்தணிகள் பல உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே நாம் அனைவரும் கவனயீனமாக செயற்படுவோமானால் விரைவில் சமூக தொற்றை நோக்கிச் செல்ல வேண்டியேற்படும். அபாயமான நிலைமைக்கு முன்னால் நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.

இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றதால், அபாய நிலைமை குறைந்துவிட்டது என்று கூறமுடியாது. பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கமைய இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

எனினும், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை ஒன்றிணைந்து போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அபாயமான நிலைமை காணப்பட்டாலும் முறையான வழிமுறைகளைக் கடுமையாக பின்பற்றினால் அவற்றிலிருந்து விடுபட முடியும். நாளொன்றுக்கு 7000 - 8000 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கக் கூடியளவிலான தயார்ப்படுத்தல்கள் சுகாதார அமைச்சினால் செய்யப்பட்டுள்ளன.

எனினும், தற்போது பழுதடைந்துள்ள இயந்திரம் நாளொன்றுக்கு 7,000-8,000 சுமார் மாதிரிகளை பரிசோதனை செய்யக்கூடியது. குறித்த இயந்திரம் வெகுவிரையில் திருத்தப்பட்டு வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.