(எம்.மனோசித்ரா)

இரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும். இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளோம். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இணையவழி மூலம் இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த இணை பேச்சாளர் உதய கம்மன்பில தொடர்ந்தும் கூறுகையில் ,

கேள்வி : பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலின் போது உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச அழுத்தம் பிரயோகிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று தற்போதைய அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் உறுதியாகக் கூறினர். ஆனால் இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கப்படுவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதல்லவா ?

பதில் : தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய 3 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ' இரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும். ' என்பதே எமது நிலைப்பாடு என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கலந்துரையாடல் நிறைவடையவில்லை. இதன் போது நிறைய விடயங்களுக்கு இணக்கப்பாடுகளுடன் எம்மால் தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. தீர்வு எட்டப்பட முடியாத நிலையில் மிகச் சிறியளவான காரணிகளே உள்ளன. குழு நிலையின் போது இவற்றுக்கான தீர்வுகளையும் எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி : இரட்டை குடியுரிமை விவகாத்தில் உடன்பாடில்லை என்று உங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினீர்கள். அவ்வாறெனில் இறுதிகட்ட வாக்களிப்பின் போது உங்கள் கொள்ளைக்கு முரணாகவா வாக்களிக்கப் போகிறீர்கள் ?

பதில்: கட்சி ரீதியில் எமது நிலைப்பாடுகளை நாம் கூறியிருக்கின்றோம். இது தொடர்பில் கலந்துரையாடல்களே இடம்பெற்று வருகின்றன. எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகளுக்கு ஆளுந்தரப்பில் பெருமளவானோர் இனக்கம் தெரிவித்துள்ளனர். இரட்டை குடியுரிமை பிரச்சினை மாத்திரமே எஞ்சியுள்ளது. ஏனையவற்று தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே இவ்விடயத்திற்கும் சிறந்த தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல

கேள்வி : யாருடைய தேவைக்காக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையோரும் பாராளுமன்றம் செல்லலாம் என்ற ஏற்பாடு உள்ளடக்கப்பட்டது ? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ,

' 20 தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள பல விடயங்கள் குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அதற்கமைய தற்போது உங்களால் கேட்கப்பட்ட மிக முக்கியமானதொன்றாகும். யாருடைய தேவைக்காக இவ்வாறானதொரு ஏற்பாடு உள்வாங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலாக யாருடைய தேவைக்காக அந்த ஏற்பாடு 19 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டது என்று கேட்க வேண்டும்.

1978 ஆம் ஆண்டு முதல் இவ்விடயம் பற்றிய ஏற்பாடு அரசியலமைப்பில் இருக்கவில்லை. ஆனால் 19 இல் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் ஒரு குழுவை மையப்படுத்தியதாகவே உள்ளன. 1978 முதல் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்படும் வரை இவ்வாறானதொரு பிரச்சினை நாட்டில் காணப்படவில்லை. குறித்த காலப்பகுதிக்குள் இரட்டை குடியுரிமையுடைய பலர் இருந்தனர்.

19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது எமது தரப்பில் பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு இதனால் பிரச்சினை ஏற்பட்டது. அவர் எழுத்துமூலம் அதனை நீக்குமாறு கோரியும் நீக்கப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் என்ன தீர்மானம் எடுப்பது ?

இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இது சர்வசன வாக்கெடுப்புக்கு இணையானதொன்றாகும். இந்நிலையில் முழுமையாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதில் இவ்விடயம் குறித்தும் அவதானம் செலுத்தப்படும். ' என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.