WFHFS இன் ஏற்பாட்டில் "சமகால குடும்பக்கட்டமைப்பு எதிர் கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்" : திஹாரியில் நடைபெற்ற செயலமர்வு (படங்கள்)

Rihmy Hakeem
By -
0

 


சமகால குடும்பக்கட்டமைப்பு எதிர் கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் திஹாரிய லப்ஸன் திருமண மண்டபத்தில் செயலமர்வு ஒன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை ஆரோக்கிய குடும்ப கட்டமைப்புக்கான பொதுநல மன்றம் - WFHFS (கம்பஹா வலயம்) எனும் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 இந்நிகழ்வில்ஆலிம்கள் ,கல்வியலாளர்கள்,உளவியலாளர்கள்,உளவள ஆலோசகர்கள் பாடசாலை அதிபர்கள்  ஆசிரியர்கள் பள்ளிவாசல் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் காதி நீதிபதிகள் காதி நீதிமன்ற மேற்பார்வையாளர்கள் ஜுரிகள் ,ஊடகவியலாளர்கள் என சமூகத்தில் உள்ள பல்வேறு பட்ட புத்திஜீவிகளையும் முக்கியஸ்தர்களையும் பதவி வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள்  என பல்வேறு தரப்பினரையும் ஒன்று சேர்த்து நடைபெற்ற மேற்படி செயலமர்வு நேற்று (01) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.

நிகழ்வின் ஆரம்பம் கிராஅத்தை தொடர்ந்து ஆரம்பமாகிய பின்னர் வரவேற்பு உரையை மௌலவியும் கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளருமான எம்.என். ஸபிய்யுள்ளாஹ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமை உரையை முன்னாள் பரீட்சை ஆணையாளரும் தற்போதைய கம்பஹா மாவட்ட காதி நீதிபதியுமான ஏ .எஸ் மொஹம்மத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.அவர் தனதுரையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தலாக் எண்ணிக்கை பற்றியும் பஸ்குகளின் எண்ணிக்கை பற்றியும் புள்ளிவிபரங்களோடு எடுத்து கூறியதுடன், அதிகமாக தலாக் மற்றும் பஸ்குகள் கேட்டு வரும் காரணங்கள் குறித்தும் விளக்கியதோடு இளவயது திருமணத்தால் சரியான புரிந்துணர்வின்மை தீர்மானம் எடுக்க கூடிய பக்குவம் இன்மை அதிகமான வாலிபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருக்கின்றமை

 ஆண்களுக்கு சரியான தொழில் வாய்ப்புக்கள் இன்மை அதிகமான கனவன் மார்கள் தொடராக நீண்ட காலமாக வெளிநாட்டில் பணிபுரிதல் திருமண வாழ்க்கை தொடர்பான சரியான அறிவு இன்மை,நவீன தொழில்நுட்ப சாதனங்களினால் சமூகத்துக்குள்ள பாதிப்பும் அவை திருமண வாழ்வின் பின்னர் தாக்கம் செலுத்தும் விதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தொடர்பிலும் தனது அநுபவங்களையும் ஆதங்கத்தையும் சபையோருடன் பகிர்ந்து கொண்டதுடன் அவர் பதவியேற்ற இரண்டு வருட காலத்துக்குள் 43 தலாக் விவகாரமும் 112 பஸ்குகள் அதாவது பெண்தரப்பினால் கோரும் மணவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளதை வருத்தத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்த கருத்து சபையோரை அதிர்ச்சியில் உரைய வைத்தது.

இதனால் இந்நிலைமை தொடராமல் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் செயற்றிட்டங்களை வழிவகுப்பது பற்றியும் அவசரமாக இந்த அறிஞர்கள் ஆலிம்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடி பொறுத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதே இச்செயலமர்வின நோக்கம் எனவும் தெளிவு படுத்தினார்.

அவரது தலைமை உரையை தொடர்ந்து விசேட உரை இடம்பெற்றது. இதனை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அவர்கள், தலைப்பு தொடர்பான விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.அவரது உரை திருமணம் விவாகரத்து சம்பந்தமாக கடந்த காலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையில் கொண்டு ஆழமான பல கருத்துக்களை முன்வைத்தார்.

இதில்  இளைஞர்களையும் யுவதிகளையும் திருமணம் செய்வதற்கு தயாரான நிலையிலும் தகுதியானவர்களாக உருவாக்க வேண்டியதும் பெற்றோர்களின் பொறுப்பாகும் என விளக்கியதோடு கடந்த காலங்களில் சரியான திருமண வாழ்க்கை பற்றிய அறிவு இன்றி ரொட்டி வட்டமாக தனது மனைவி சுடுவதில்லை ,தனது கனவர் பற்பசையை கீழ் பாகத்தில் இருந்து நசுக்கி எடுக்காமல் நடுப்பகுதியில் இருந்து நசுக்கி பற்பசையை எடுக்கிறார்கள் போன்ற அற்ப காரணங்களுக்காகவும் விவகாரத்து கேட்டு வந்துள்ள சம்பவங்கள் தொடர்பில் எடுத்து கூறியதுடன் பல்வேறு புள்ளிவிபரங்களுடன் இது தொடர்பான பிரச்சினையை விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து குடும்ப கட்டமைப்பை பாதுகாப்பதில் சமூக பிரமுகர்களின் வகிபாகம் என்ற தலைப்பில்  மௌலவி அஷ்செய்கு முஜீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து Lead institute இன் தலைவரும் உளவள ஆலோசகருமான அஷ்செய்கு U.K ரமீஸ் அவர்களால் இந்த விடயம் சம்பந்தமான எதிர் கால வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு அவரினால் விசேட செயலமர்வு ஒன்றையும் சக உளவள ஆலோசகரும் கல்லொழுவ பாடசாலையின் அதிபருமான ஆஸிம் அவர்களின் உதவியுடன் செய்யப்பட்டது.

இதில் சமூகத்தில் காணப்படும் பல்வேறு துறைசார்ந்தவர்களையும் வெவ்வேறு குழுக்களாக பிரித்து அந்தந்த குழுக்களின் சார்பான ஆலோசனைகளையும் இந்த சவால்களுக்கான தீர்வுகளையும் குழு அறிக்கையாக பெற்று அவற்றை தனித்தனியாக மேடையில் சபையோர் முன்னிலையில் முன்வைத்தமை நிகழ்வின் விசேட அம்சமாகும்.

இதனையடுத்து மௌலவி ஏ.எம்.எம் அம்ஜத் அவர்களின் தொகுப்புரை சுருக்கமாக இடம்பெற்றதுடன் பகல்போசனத்துக்கும் ,ளுஹர் தொழுகைக்குமான இடைவேளை வழங்கப்பட்டது.

அதனையடுத்து சிங்கள மொழிமூலமான தொகுப்பை அஷ்செய்கு முனீர் முழப்பர் அவர்களால் நிகழ்த்தியதுடன் அஷ்செய்கு ஏ.செய்யிது ஹஸன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்  பல்வேறு கட்டங்களின் போதான படங்களையும் காணலாம்.

நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்  முஸ்லிம் சேவை அறிவிப்பாளர் மொஹம்மத் ரழீன் அவர்கள் தொகுத்து வழங்கியமை சிறப்பம்சமாகும்.

Video - https://www.facebook.com/tamil.newsnow.lk/videos/4524384654269960/

செய்தித்தொகுப்பு 

எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்

கஹட்டோவிட்ட.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)