கம்பஹா மாவட்டத்திலிருந்து தமது உயர் கல்வியினை தொடர்வதற்காக வேண்டி வெளி மாவட்டங்களுக்கு சென்று இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தினுள்ளேயே பரீட்சை நிலையமொன்றை நிறுவி அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

சியன செய்தி சேவையின் வேண்டுகோளின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

கம்பஹா மாவட்டத்திலிருந்து தமது உயர் கல்வியினை தொடர்வதற்காக வேண்டி கணிசமான தமிழ் பேசும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று கற்று வருகின்றனர். குறிப்பாக கொழும்பு, மாவனல்லை, கம்பளை, கெக்குணுகொல்லை, ஹெம்மாதகம, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான பாடசாலைகளிலேயே அவர்கள் இவ்வாறு தமது உயர்கல்வினை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பீதி காரணமாக குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் சென்று பரீட்சை எழுதுவதில் குறித்த மாணவர்கள் பல தடைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

இந்த நிலையில் குறித்த மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு அவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தோற்றும் வகையில் இம்மாவட்டத்தினுள்ளேயே பரீட்சை நிலையமொன்றை உருவாக்கி அதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என பொறுப்புவாய்ந்த ஊடக நிறுவனம் எனும் ரீதியில் சியன நியுஸ் செய்திச் சேவை கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் பாராளுமன்றத்தில் குறித்த கேள்வியினை எழுப்பியமை தொடர்பில் நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அதற்கு துரித கதியில் பதிலளித்த கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ந்தும் இவ்வாறான சமூக விடயங்களில் எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை பொறுப்புவாய்ந்த ஊடக நிறுவனம் எனும் ரீதியில் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.