இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கம்பஹா மாவட்டத்தினை பிறப்பிடமாகக் கொண்ட வெளி மாவட்டங்களில் கல்வி கற்று வருகின்ற பெரும்பாலான தமிழ் மொழி மூலமாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பலர் எமது செய்திச் சேவையினை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற புதிய கொரோனா கொத்தணி காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என அரசாங்கம் நேற்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து தமது உயர் கல்வியினை தொடர்வதற்காக வேண்டி கணிசமான தமிழ் பேசும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று கற்று வருகின்றனர். குறிப்பாக கொழும்பு, மாவனல்லை, கம்பளை, கெக்குணுகொல்லை, ஹெம்மாதகம, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான பாடசாலைகளிலேயே அவர்கள் இவ்வாறு தமது உயர்கல்வினை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பீதி காரணமாக குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் சென்று பரீட்சை எழுதுவதில் குறித்த மாணவர்கள் பல தடைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

குறித்த பகுதிகளிலுள்ள தனிநபர் விடுதிகளில் சேர்ந்தே அவர்கள் தமது உயர்கல்வியினை தொடர்ந்து வந்ததாகவும், தற்போது குறித்த விடுதிகளுக்கு கம்பஹா மாவட்ட மாணவர்கள் என்பதால் தம்மை அனுமதிப்பதில்லை என்று விடுதி உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதனால் அவர்கள் பரீட்சை எழுதுவதற்கான வசதி வாய்ப்புகள் இன்மையால் குறித்த மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பெற்றோர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கம்பஹா மாவட்டத்தில் உயர் கல்வியினை தொடர்வதற்கு உகந்த சகல வசதிகளையும் கொண்ட தமிழ் மொழி மூலமான பாடசாலையொன்றின் குறைப்பாடே அவ்வாறு மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று கற்பதற்கான காரணம் என பல கல்வியலாளர்கள் எமது செய்திச் சேவையினை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். 

இந்த நிலையில் குறித்த மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு அவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தோற்றும் வகையில் இம்மாவட்டத்தினுள்ளேயே பரீட்சை நிலையமொன்றை உருவாக்கி அதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என பொறுப்புவாய்ந்த ஊடக நிறுவனம் எனும் ரீதியில் சியன நியுஸ் செய்திச் சேவை கேட்டுக் கொள்கின்றது.

மேலும் பரீட்சை தொடர்பான முறைப்பாடுகளையும், ஏனைய தகவல்களையும் அறிந்து கொள்ள பரீட்சை திணைக்களத்தின் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


துரித அழைப்பிலக்கம் - 1911

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் - 0112785211/ 0112785212

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் முடிவுகள் கிளை – 0112784208/ 0112784537/ 0113188350/ 0113140314




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.