கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீள அமுலாக்குமாறு மேல் மாகாணத்திலும், ஏனைய பிரதான நகரங்களிலும் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அமுலானது. அதன் போது கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்கு மாற்றுத் திட்டங்களை வகுக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களங்கள் - கூட்டுத்தாபனங்கள் - நியதிச் சபைகள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு விசேடமாக ஏற்புடையதாகும். இந்த மாவட்டங்களையும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அபாய வலயங்களாக பெயரிட்டுள்ள பிரதேசங்களையும் தவிர ஏனைய மாவட்டங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் சுகாதார விதி முறைகளை கடுமையாக அமுலாக்கி வழமை போல் இயங்க வேண்டும்.

கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதைத் தமது விடயதானத்திற்குள் உள்ளடக்கிய சகல சேவைகளையும் வழங்குவதற்கு நிறுவனத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நிறுவனங்களும் தூரத்திலிருந்து நிறைவேற்றக்கூடிய பணிகளையும், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.                

உரிய நிர்ணயங்களை மேற்கொண்ட பின்னர், ஆவணங்களையும், உபகரணங்களையும் முறையான அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். காலை 8.30 தொடக்கம் மாலை 4.15 வரை வீடுகளில் இருந்து வேலை செய்ய முடியும். ஊரடங்குச்சட்டம் அமுலாக்கப்படாத சந்தர்ப்பங்களில் தேவைக்கு ஏற்ற நேர மாற்றங்களை மேற்கொள்ள நிறுவனத் தலைவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்திற்குள் வராத ஊழியர்களை மேலதிக மனித வளங்கள் தேவைப்படும் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும். வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை சிறப்பாகவும், செயற்றிறனாகவும் முன்னெடுக்க மாற்று தொலைத்தொடர்பாடல் ஊடகங்களைப் பயன்படுத்தலாம். இவற்றில் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி செயலிகள் போன்றவற்றை உள்ளடக்க முடியும்.


வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையான நிதியை வழங்கும் பொறுப்பு பிரதம கணக்காளரைச் சார்ந்ததாகும். மக்கள் தமது தேவைகளை தாமதமின்றி முன்வைப்பதற்கு வசதியாக, பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் சகல நிறுவனங்களும் ஒன்-லைன் தளங்களை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும் ஊழியர்களையும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்கலாம். எனினும், கொவிட்-19 நோய் அறிகுறிகள் தென்படும் ஊழியர்களிடம் எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது.

சகல அரச நிறுவனங்களும் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. துறைமுகங்கள் சார்ந்த பணிகளையும்,    சுங்கம் - நீர்விநியோகம் - மின்விநியோகம் முதலான சேவைகளையும் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலாளர் விடுத்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.