ஒரு கிலோ சீனிக்கான அதிக பட்ச விலையாக ரூபா 85 என வர்த்தமானி அறிவித்தல் வெளியான போதும், இந்த நாட்களில் கடைகளில் சீனி ஒரு கிலோவின் விலை 130 வரை விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெள்ளை சீனிக்கான அதிக பட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் வெளியிடப்பட்டிருந்தன.

அதில் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிக பட்ச சில்லறை விலை ரூபா 90 எனவும், பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிக பட்ச சில்லறை விலை ரூபா 85 எனவும், மொத்த விலை ரூபா 80 எனவும் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பில் மத்திய வங்கியினுடைய அறிக்கைகளை ஆராய்ந்த போது புறக்கோட்டையில் ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 125 என்று தெரியவருகிறது. இந்த விலையானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விலையினை விட ரூபா 40 அதிகமாகும்.

மேலும் மத்திய வங்கி அறிக்கைகளின் பிரகாரம் நாரஹேன்பிட்ட சந்தையில் ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ரூபா 125 ஆக காணப்பட்டது. இதுவும் நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட ரூபா 40 அதிகமாகும். 

எனினும் சில்லறை விற்பனை நிலையங்களில் தற்போது ஒரு கிலோ சீனியின் விலை 130 இனை விட அதிகம் என்பதுடன், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனியின் விலை 140 இற்கும் விற்கப்படுகிறது.

மத்திய வங்கியின் அறிக்கைகளின் அடிப்படையில் சீனியின் விலையானது ஒரே ஒரு நாள் மட்டுமே குறைவடைந்துள்ளது. வர்த்தமானி வெளியாகுவதற்கு முன்னர் ஒரு கிலோ சீனியின் மொத்த விலை புறக்கோட்டை சந்தையில் ரூபா 125 ஆக இருந்ததுடன், வர்த்தமானி அறிவித்தல் வெளியான மறு தினம் (11) ரூபா 100 ஆக குறைவடைந்துள்ளதுடன், மீண்டும் அடுத்தநாள் (12) ரூபா 125 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் நாரஹேன்பிட்ட சந்தையில், வர்த்தமானி அறிவித்தல் வெளியான மறுநாள் (11) ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை ரூபா 85 ஆக குறைவடைந்துள்ளதுடன், மறுநாள் (12) ரூபா 125 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, மத்திய வங்கி அறிக்கையின் படி வர்த்தமானி அறிவித்தலால், சீனியின் விலை ஒரே ஒரு நாள் மட்டுமே குறைவடைந்துள்ளது.

அதிலும் புறக்கோட்டை சந்தையில் மொத்த விலை ஓரளவே (125 இலிருந்து 100) அதுவும் ஒருநாள் (11) மட்டுமே குறைவடைந்திருந்தது.

நிலுக சந்துன் பத்மசிறி, ரிஹ்மி ஹக்கீம்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.