மட்டு. போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் ஒருவர் பெண் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக வைத்தியாலை நிர்வாகம் நேற்று (02) அறிவித்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் குழந்தை பிரசுவிப்பதற்காக கடந்த செட்டெம்பர் மாதம் 20 ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை எடை குறைவு காரணமாக கண்ணாடி பெட்டியில் வைத்து வைத்தியர்களின் கண்காணிப்பில் தாயார் குழந்தையை பராமரித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ம் திகதி வைத்தியசாலையில் இருந்த குழந்தையின் தாயார் காணாமல் போயுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று திரும்புவார் என வைத்தியர்கள எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் வைத்தியசாலைக்கு வரவில்லை. இதனையடுத்து குறித்த குழந்தையை விட்டுவிட்டு தாய் தப்பியோடியுள்ளார் என தெரியவந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு முறைகப்பாடு செய்துள்ளதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த தாயை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-சரவணன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.