நடக்குமா? நடக்காதா? நடந்தால் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? ரசிகர்கள் இல்லாத போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்குமா? - கடந்த 2 மாதங்களாக ஏராளமான கேள்விகள், யாரிடமும் பதில் இல்லாத கேள்விகள்.

அனைத்து கேள்விகளுக்கும் நவம்பர் 10-ஆம் தேதி வரை, 53 நாட்களாக நடந்த 2020 ஐபிஎல் தொடர் விடையளித்து விட்டது. கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாட்டால் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாத ரசிகர்கள் தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் கண்டு ரசித்தனர், போட்டிகளுக்கு ஆதரவளித்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றியுள்ளது.

இறுதிப்போட்டி குறித்து கூறுவதென்றால் இரண்டே பத்திகளில் எழுதிவிடலாம். முதலில் பேட்டிங் செய்த டெல்லி பவர் ஃபிளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட, அப்போதே ரசிகர்கள் போட்டியின் முடிவை ஓரளவுக்கு கணிக்கத் தொடங்கினர்.

ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் பேட்டிங்கால் 156 ரன்களை டெல்லி எட்டிய போதிலும், எவ்வளவு விரைவாக போட்டியை வெல்லமுடியும் என்பது தான் மும்பையின் முதன்மை நோக்கமாக இருந்தது.

இறுதி போட்டியில் பந்துவீச்சில் போல்ட், கோல்டர் நைல் ஆகியோரும், பேட்டிங்கில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷனும் ஜொலித்தனர்.

8 ஆண்டுகளில் 5 முறை சாம்பியன்

மும்பை இந்தியன்ஸ்

தொடர்ந்து இரண்டுமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய 5 முறைகள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மேலும் 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் டி20 சாம்பியன் கோப்பையையும் வென்றுள்ளது.

2008-இல் முதல் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 2012 வரை முதல் 5 ஆண்டுகளில் மும்பை வலிமையான அணியாக இருந்தபோதிலும் அந்த அணியால் கோப்பையை வெல்லமுடியவில்லை.

2010-இல் மட்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடிந்தது. இவ்வளவுக்கும் சச்சின் டெண்டுல்கர் அப்போது கேப்டனாக இருந்தார். ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், ராயுடு, ஜெயசூர்யா, பிராவோ போன்ற பல சிறந்த வீரர்கள் அணியில் இருந்தனர்.

2013 வரை சிறந்த அணிகளில் ஒன்றாக மட்டும் கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது.

அது ஆரம்பம் தான், அதன்பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து வென்றுவந்த அந்த அணி இந்தாண்டு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்று சிஎஸ்கே அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

2019 மற்றும் 2020 - என்ன வித்தியாசம்?

மும்பை இந்தியன்ஸ்

2019 மற்றும் 2020 ஐபிஎல் தொடர்களிடையே பெரும் வித்தியாசம் இறுதிப்போட்டியில் தான். சிஎஸ்கே மற்றும் மும்பை இடையே நடந்த மிகவும் பரபரப்பான 2019 இறுதிப்போட்டியில் மலிங்காவின் மாயாஜால பந்தால் ஒரு ரன்னில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது மும்பை.

2020 இறுதிப்போட்டியில் மும்பைக்கு எந்த சிரமமும் இல்லை. கிட்டத்தட்ட ஒருபக்க முடிவுதான். ஆரம்பம் முதல் இறுதிவரை அசர வைக்கும் அதிரடி பாணி மட்டுமே.

மிக அதிரடியாக விளையாடும் அனுபவம் வாய்ந்த தொடக்க வீரர்கள், இளம் மற்றும் அனுபவம் கலந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், சர்வதேச தரம் கொண்ட அதிவேக பந்துவீச்சாளர்கள், நுட்பமான சுழல் பந்துவீச்சாளர்கள், பாய்ச்சல் ஃபீல்டர்கள் என மிக சிறந்த படையை கொண்டது தான் மும்பை இந்தியன்ஸ்.

ரோகித் சர்மா, குயின்டன் டி காக், போலார்ட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, பும்ரா, போல்ட் என ஒரே அணியில் இவ்வளவு 'மேட்ச் வின்னர்கள்' வேறு எந்த அணியிலும் இல்லை.

இவர்களை தவிர ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், கோல்டர் நைல் மற்றும் ஜெயந்த் யாதவ் போன்றோரும் மிக சிறப்பாக பங்களிப்பவர்கள், அணியின் வெற்றிக்கு பங்களிப்பவர்கள் தான்.

லீக் போட்டி ஜாம்பவான்கள் வரிசையில் மும்பை?

மும்பை இந்தியன்ஸ்

உலக அளவில் கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, பேஸ்பால் போன்ற பல விளையாட்டுகள் தொடர்பான லீக் போட்டிகளில் சிறப்பாக பங்களிக்கும் franchise அணிகள் உலகெங்கும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளன.

என்பிஏ கூடைப்பந்து லீக் போட்டி தொடர்களில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ், பேஸ்பால் லீக் போட்டிகளில் ஜொலித்து வரும் நியூ யார்க் யாங்கீஸ், பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் மறக்க முடியாத பங்களிப்பை பல ஆண்டுகளாக அளித்துவரும் மான்செஸ்டர் யுனைட்டட் மற்றும் ஸ்பெயின் கால்பந்தாட்ட லீக் போட்டிகளில் எண்ணற்ற முத்திரைகள் பதித்த ரியல் மாட்ரிட் ஆகியவை இவ்வரிசை சாம்பியன் அணிகள்.

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, வீழ்த்த முடியாத அணி என்ற பிம்பத்தை சிலர் மத்தியில் ஏற்படுத்தி வரும் நிலையில், உலக அளவில் லீக் போட்டிகளில் சாதனைகள் படைத்த ஜாம்பவான் அணிகள் போல் மும்பை இந்தியன்ஸ் அணியும் உருவெடுத்து வருகிறதா?

இது குறித்து விளையாட்டு வீரரும், விமர்சகருமான ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''ரியல் மாட்ரிட், ஏசி மிலன், மான்செஸ்டர் யுனைட்டட் போன்ற அணிகள் தங்கள் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளில் மட்டுமல்ல சாம்பியன்ஸ் லீக் போட்டிகள், யூரோ லீக் போட்டிகள் என பல அரங்குகளிலும் தனி முத்திரை பதித்த அணிகள்.

கூடைப்பந்து லீக் போட்டிகளில், லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் அணியின் சாதனைகள் பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

இம்மாதிரியான லீக் போட்டிகளில் ஜாம்பவான் அணிகளுக்கு உள்ள ரசிகர்கள் எண்ணிக்கை, சில நாடுகளின் தேசிய அணிக்கு உள்ள ரசிகர்களை விட அதிகம்.

இந்த அணிகள் மற்றும் இவற்றின் வீரர்கள் ரசிகர்களிடையே உருவாக்கியுள்ள தாக்கம், ஒருவரின் கற்பனையை தாண்டி மிகையானது.

மும்பை இந்தியன்ஸ்

கிரிக்கெட்டை பொறுத்தவரை லீக் கிரிக்கெட் வகை கடந்த 10,12 ஆண்டுகளாகதான் பிரபலமாகி வருகிறது.

தற்போதைய நிலையில் மிக சிறப்பாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சவால் அளிக்கும் அணிகள் குறைவே. ஆனால் மேற்கூறிய உலகத்தரம் வாய்ந்த அணிகளின் சாதனைகளை, தாக்கத்தை மும்பை இந்தியன்ஸ் அணி எட்ட இன்னும் பல ஆண்டுகளாகும். இன்னும் பல கடும் சவால்களை சந்தித்து அந்த அணி அவற்றை வெல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

1980களில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 1990-களின் இறுதி முதல் 2008 வரை ஆஸ்திரேலிய அணியும் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் நிகழ்த்திய சாதனைகள் மிக அதிகம்.

அக்காலகட்டத்தில் இந்த அணிகள் ஏதாவது ஓரிரு போட்டிகளில் தோற்றுவிட்டால்கூட அது தலைப்பு செய்திகளாகிவிடும்.

இந்த அணிகள் அழுத்தம் நிறைந்த தருணங்கள் பலவற்றை வென்று, தாங்கள் சாம்பியன் அணி என பலமுறை நிரூபித்துள்ளன.

அப்படிப்பட்ட ஜாம்பவான் அணியாக மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி, பல கடும் சவால்களை, அழுத்தம் நிறைந்த தருணங்களை சந்தித்து வெற்றி பெற வேண்டும்.

அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடர், மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த சுவராஸ்யங்களையும், அந்த அணிக்கு சவால் அளிக்கும் அணிகள் குறித்த எதிர்ப்பார்ப்பையும் இப்போதே தொடங்கிவிட்டது என கூறலாம்.

சிவகுமார் உலகநாதன் - பிபிசி தமிழ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.