-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஏ.அதீபத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப்பெற்று புத்தளம் நகருக்கும் பாடசாலைக்கும் பெருமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

சமூகத்தில் பற்றாக்குறையாக காணப்பட்டு கொண்டிருக்கின்றன பெண் மகப்பேற்று வைத்திய நிபுணராக உருவாக வேண்டும் என்பதே தனது பிரதான எதிர்கால இலக்கு என்றும் முதலிடம் பெற்றுள்ள மாணவி தெரிவித்துள்ளார்.

இவர் புத்தளம் நகரை சேர்ந்த முஹம்மது அர்ஷாத், ஆசிரியை ஏ.எல்.எப். மஹ்தியா ஆகியோரின் புதல்வியாவார். இது தொடர்பாக செய்தியாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு ஒன்று இன்று (16) காலை ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்றது.

இந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து தோற்றிய 360 மாணவர்களில் 76 மாணவர்கள் சித்தி அடைந்திருக்கின்றமையும் விசேட அம்சமாகும்.

புத்தளம் நகர வரலாற்றில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இந்த மாணவி லாவகமாக பதில்களை வழங்கினார். கொரோனா அச்சுறுத்தல், நீண்ட கால விடுமுறைகளுக்கு மத்தியில் எவ்வாறு உங்களால் இந்த இலக்கை அடைய முடிந்தது நாம் வினவியபோது, வீடுகளில் இருந்தவாறு பாடங்களை மீட்டி, தெரியாததை தனது பெற்றாரிடம் கேட்டு தெரிந்து கொண்டே இந்த இலக்கை அடைந்ததாக தெரிவித்தார். தான் சித்தி அடைவேன் என என்னியிருந்ததாகவும் ஆனால் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினை அடைவேன் என என்னியிருக்கவில்லை என்றும் இதிலே நான் மிக சந்தோசம் அடைவதாகவும் மாணவி தெரிவித்தார்.

எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இறைவனுக்கும், பெற்றோர், அதிபர், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் மாணவி குறிப்பிட்டார். குறித்த மாணவி வகுப்புக்களில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு விடையளிக்கும் முதல் மாணவியாக திகழ்ந்ததோடு கொரோனா விடுமுறை ஒன்லைன் வகுப்புக்களில் கலந்து கொள்ள குறித்த நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்பதாக தயாராகி விடுவதாகவும், தான் 200 புள்ளிகளை பெறுவேனா என அடிக்கடி வினவி வந்ததாகவும் மாணவிக்கு போதித்த ஆசிரியர்களான ஏ.எச்.எம். ஹஸீப் மற்றும் ஏ.டபிள்யு.ஆஷிகா ஆகியோர் தெரிவித்தனர்.

இவ்வருடம் ஓய்வு பெறப்போகும் தனது அன்புக்குரிய அதிபருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் மாணவி தெரிவித்தார். கடந்த காலங்களில் புத்தளம் மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமை பரிஸில் பரீட்சையில் முதல் 10 இடங்களும் பெற்று சாதித்த இந்த பாடசாலையானது, தேசிய பாடசாலையான ஸாஹிரா கல்லூரியின் நிர்வாகத்தில் இருந்த நிலையில் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸினால் தனியாக பிரிக்கப்பட்டு மாகாண பாடசாலையாக உருவாக்கப்பட்டதன் பின்னர் இத்தகைய வரலாற்று வெற்றிகள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் புத்தளம் நகர பிதா கே..ஏ. பாயிஸ் ஆகியோர் குறித்த மாணவியின் வீட்டுக்கு நேரடியாக சென்று தனது வாழ்த்துக்களை தெரிவிதுள்ளனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.