ஜனாஸா எரிப்பு வழக்கினை முதலில் குரல்கள் இயக்கம் தாக்கல் செய்திருந்தது யாவரும் அறிந்ததே.

இன்று (26) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.வழக்கிற்கு எமது சட்டத்தரணிகள் முழுத் தயார் நிலையில் சென்றிருந்தும், குறிப்பிட்ட வழக்கிற்கு அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த சிலர் Proff.மெதிகா உட்பட intervening petitioners ஆக வந்திருந்தார்கள்.அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும் சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அதனால் வழக்கை இன்னொரு நாளுக்கு தள்ளிப் போடுமாறும் அவரின் ஜூனியரின் ஊடாக அறிவித்திருந்தார்.

இதனை வெகுவாக ஆட்சேபித்த எமது சட்டத்தரணிகள் ஜனாஸா எரிப்பு என்பது மிகவும் ஒரு முக்கியமான விடயம் என்றும் இக்காரணங்களுக்காக வழக்கைப் பிற்போட இணங்க முடியாது என்றும் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வழக்கை விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், புதன்கிழமையன்று (25) மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட விசேட நகர்த்தல் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை விசேடமாக முன்னெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானத்ததற்கமைவாக இன்று இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா, விரான் கொரயா மற்றும் என்.எம்.சஹீட் போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு, எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரி பல தரப்பினராலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பல மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதியும் ஜூலை மாதம் 13ஆம் திகதியும் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தன. எனினும் இதுவரை தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற விவகாரத்தினால் முஸ்லிம்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள சூழ்நிலையில், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்ற நிலையில், இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற விசாரணைகளின்போது, சுகாதார அமைச்சின் இணக்கப்பாட்டுடன் சட்டமா அதிபர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காவிடின் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது..

நன்றி - குரல்கள் இயக்கம், ராஸி மொஹமட்,அஸ்லம் எஸ் மௌலானா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.