(எம்.மனோசித்ரா)

நாட்டில் நீர் மற்றும் மலசலகூட வசதிகளற்ற 400 பாடசாலைகள் உள்ளன. அவ்வாறான பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை எனத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, இவ்வாறான பாடசாலைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கடந்த இரு வாரங்களாக இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமும் , சாதாரண தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் சாதாரண தர பரீட்சை குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கான தகவல்கள் கோரப்படுகின்றன.

சாதாரண தர பரீட்சையில் 54 பாடங்கள் உள்ளன. அவற்றில் மத பாடங்கள் 5 , மொழி பாடங்கள் 2, தொகுதி பாடங்கள் மற்றும் கட்டாய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், வரலாறு உள்ளிட்டவை உள்ளடங்குகின்றன. இவற்றில் நிறைவு செய்ய வேண்டியப பாட அலகுகளும் உள்ளன.

இவ்வருடத்தில் 194 பாடசாலை நாட்களில் 87 நாட்கள் மாத்திரமே பாடசாலைகளில் நேரடியாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இணையவழியூடாக இடம்பெற்ற கற்பித்தல் நடவடிக்கைகளில் எந்தளவில் பாட அலகுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்ற தகவல்கள் தற்போது கோரப்படுகின்றன. முழுமையாக இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

தற்போது எமக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலையொன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைவாகக் காணப்பட்டால் அங்கு கை கழுவுவதற்காக தொட்டி (சிங்க்) ஒன்றும் , 51 - 100 க்கு இடைப்பட்ட மாணவர்கள் காணப்பட்டால் இரண்டும், 2000 ஐ விட அதிகமான மாணவர்கள் காணப்பட்டால் 20 - 40 தொட்டிகளும் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீர் மற்றும் மலசலகூட வசதிகள் அற்ற சுமார் 400 பாடசாலைகள் உள்ளன. அவ்வாறான பாடசாலைகளுக்கு அவ்வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அவை தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகிறது. இவ்வசதிகள் அற்ற பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. நீர் மற்றும் மலசலகூட வசதிகள் அற்ற பாடசாலைகள் தொடர்பில் நானும் மாகாண , வலய மற்றும் தொகுதி ரீதியான பணிப்பாளர்கள் இணைத்து பிரத்தியேகமாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.