வர்த்தமானி விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா? - இம்ரான் மகரூப் எம்.பி

வர்த்தமானி விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திங்கள்கிழமை இடம்பெற்ற திருகோணமலை பட்டினமும் சூழழும் பிரதேச சபை உப தவிசாளர் நௌபரின் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சில பொருட்களின் விலை இரட்டிப்பாகவும் இன்னும் சில பொருட்களின் விலை அதனை விட அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கம் சில பொருட்களுக்கு மட்டும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விலைக்குறைப்புச் செய்கின்றது. இந்த விலைக் குறைப்பும் கூட சரியாக பொதுமக்களை சென்றடைய வில்லை. 

அரசாங்கம் வர்த்தமானியில் விலைக்குறைப்புச் செய்யும் வகையில் தங்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் அந்த விலையில் தம்மால் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே வர்த்தமானி மூலமான விலைக்குறைப்பின் பிரயோசனம் என்ன என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சகல அத்தியாவசியப் பொருட்களினதும் விலை அதிகரித்துள்ள நிலையில் சில பொருட்களுக்கு மட்டும் வர்த்தமானியில் விலைக்குறைப்புச் செய்வதன் நோக்கம் என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

வர்த்தமானியின் மூலம் செய்யப்பட்ட விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பதை பரிசீலிக்கும் பொறிமுறை அரசிடம் இல்லை. இதனால் அந்த விலைக் குறைப்பினால் சகல பொதுமக்களும் பயனடையவில்லை. எனவே வர்த்தமானி விலைக்குறைப்பு வெறும் கண்துடைப்பு போன்று உள்ளது.

ஜனாதிபதி தனது ‘சௌபாக்கியத்தின் நோக்கு’ திட்டத்தில் சகல அமைச்சுக்களுக்கும் துறைசார்ந்த திறமைவாய்ந்த அமைச்சர்களை நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் வர்த்தமானியில் விலைக் குறைப்பை செய்து விட்டு அமைதியாக இருப்போரையே நாங்கள் இங்கு காண்கிறோம். 

எனவே வெறுமனே கண்துடைப்புக்காக நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் உண்மையாக பொதுமக்கள் பயன்பெறும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நௌபரை உப தவிசாளராக தெரிவு செய்த தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா சம்ம்ந்தன் ஐயா அவர்களுக்கும் அவரின் செயலாளர் குகதாசன் அவர்களுக்கும் இச்சந்தர்பத்தில்  எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.