எதிர்க்கட்சி இன்று என்ன குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், மக்கள் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட போது நாடு முழுவதும் அதன் விளம்பரங்களுக்கும் சுவரொட்டிகளுக்கும் வீடு நிர்மாணிக்கப்பட்டதை விட அதிக பணம் செலவிடப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது எதிர்க்கட்சியின் பங்களிப்பு பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எங்களுக்குக் காட்டித் தந்தார் என்றும் தற்போது இருப்பது ஒரு பலவீனமான எதிர்க்கட்சி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மொரட்டுவை, சொயிசாபுரவில் நிர்மாணிக்கப்படவுள்ள 'சியபத' அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நடும் வைபவத்தில் நேற்று (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கௌரவப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இந்த வேலைத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்தில் 160 தேர்தல் தொகுதிகளிலும் கட்டப்படவுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 16,000 ஆகும்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத சீ. தோல்வத்த, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.