ஆ.ரமேஸ்

குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக, மருமகளால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின்போது தாக்குதலுக்கு இலக்கான மாமனார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இச்சம்பவம், நேற்று (01) காலை, நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாரிமுத்து கோவிந்தம்மா (வயது  80) என்ற 4 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார் என்றும் இவரது கணவர் அங்கமுத்து மாரிமுத்து (வயது 85 ), வைத்தியசாலையில்  சிகிச்சைப்பெற்று  வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயான மருமகள், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைக்கலப்பாக மாறியதாகவும் இதன்போது, மாமியாரையும் மாமனாரையும், மருமகள சரமாறியாகத் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தாயையும் மலசலக்கூடத்தில் காயங்களுடன் காணப்பட்ட மாமனாரையும் பிரதேசவாசிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு, 1990 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி, மாமியார் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

எனினும் கைது செய்யப்பட்ட மருமகள், தனது மாமி, மாமனாரை, இனந்தெரியாதோர் தாக்கியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.