(செ.தேன்மொழி)

சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் நாட்டு மக்களின் சுகாதாரத் துறையின் மீதான நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, உரிய வகையில் முடக்கல் முறைமையை மேற்கொள்வதன் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர்,மேலும் கூறியதாவது, விரைவான அன்ரிஜன் பரிசோதனை கருவியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான வேண்டுகோளை நாம் கடந்த ஏப்ரல் மாதம் விடுத்திருந்தோம். இருப்பினும் அது கொண்டுவரப்படவில்லை.

அன்ரிஜன் பரிசோதனை என்பது உடலின் அன்ரிஜன் அளவை பரிசோதிக்கும் பரிசோதனையாகும். குறித்த நோய் தாக்கம் உடலில் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டு 5 நாட்களுக்குள்தான் உரிய முடிவை காணமுடியும். அதற்கு மேலதிக நாட்கள் கடந்த பின்னராயின் விரைவான அன்ரி உடல் பரிசோதனையை மேற்கொள்வதே சிறந்த முறைமையாகும்.

ஆயினும் இதுவரையில் இந்த கருவி நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இந்த பரிசோதனையை மேற்கொண்டு நோய் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்க பெறினும், அன்ரி உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாகவே சிறந்த முடிவை காணலாம். இது தொடர்பில் அந்த கருவியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் ஊடாக தொற்று இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. இரண்டையும் மேற்கொள்வதன் ஊடாகவே தகுந்த முடிவுக்கு வரலாம்.

இருப்பினும் கடந்த 2015ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு என்னுடைய பொறுப்பில் இருந்த காலப்பகுதியில் இந்த பரிசோதனை கருவிகளை எமது நாட்டிற்கு கொண்டுவருவதற்கு ஏதுவான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். சில குறைபாடுகளின் காரணமாக அதனை கொண்டுவர முடியவில்லை.

இருப்பினும் நாம் அந்த காலத்திலேயே இதற்கு ஏதுவான நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தோம். 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து வைத்திய சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த பரிசோதனையை நாட்டில் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஏனெனில் இதனூடாக விரைவாக முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதிபலன் பெருமளவில் இல்லை எனினும் கொரோனா தொற்று அலை ஏற்பட்டிருக்கும் போது இது பெறுமதி வாய்ந்ததாக இருக்கும். கொவிட் நிலைப்பாடு தொடர்பிலான தெளிவொன்றுக்கு இந்த பரிசோதனையின் ஊடாக வரமுடியும். அதனை தொடர்ந்து ஏனையவர்களை பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்ப முடியும்.

இருப்பினும் அதனை செய்யவில்லை. மாறாக இப்பொழுது அவசர கொள்வனவு முறையில் இதனை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை முன்னதாகவே மேற்கொண்டிருந்தால் இன்று கொரோனா நாட்டில் இவ்வளவு தூரம் பரவி இருக்காது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.