ஜோர்ஜா மாநிலத்தைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் அதிபர் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி பைடன் முன்னிலை பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அந்த மாநிலத்தில் முன்னிலையில் இருந்துவந்த அதிபர் ட்ரம்பைவிட தற்போது 5,587 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் பைடன்.

இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

பென்சில்வேனியா 20 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலம் என்பதால் இங்கு பைடன் வென்றால் உடனடியாக அவர் அதிபர் ஆவதற்குத் தேவையான முன்னிலை வந்துவிடும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அங்கே ஒரு மாநிலத்தில் ஒரு அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் வென்றால், அந்த மாநிலத்துக்குரிய அனைத்து தேர்தல் சபை வாக்குகளும் அவருக்கு சென்று சேர்ந்துவிடும். இரண்டு மாநிலங்கள் மட்டுமே தங்கள் தேர்தல் சபை வாக்குகளை வென்ற வாக்குகளுக்கு ஏற்றபடி பிரித்து வழங்கும்.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநிலங்களில் அரிசோனா, ஜோர்ஜா, நெவாடா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே பைடன் முன்னிலை பெற்று நடைபோட்டுக்கொண்டிருந்தாலும், பென்சில்வேனியாவில் அவர் பெற்றிருக்கிற முன்னிலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

பென்சில்வேனியாவில் அவர் வெற்றி பெற்றால் இங்குள்ள 20 தேர்தல் சபை வாக்குகளைப் பெறுவார். அதன் மூலம் அவரது தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கை 273 ஆகும். இதன் மூலம் பிற மாநிலங்களின் முடிவுகளைப் பற்றி கவலையில்லாமல் அவர் அதிபர் ஆவதற்குத் தேவையான 270 இலக்கைக் கடந்துவிடுவார்.

ஒரு கட்டத்தில் ட்ரம்ப் லட்சக்கணக்கில் இந்த மாநிலத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அஞ்சல் வாக்குகளை எண்ணுவது தொடங்கியபின் தொடர்ந்து பைடன் அதிக வாக்குகளைப் பெற்று, ட்ரம்பின் முன்னிலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். தற்போது ட்ரம்பை பின்னுக்கும் தள்ளிவிட்டார்.

இந்த முன்னிலையை அவர் தொடர்ந்து தக்கவைத்தால், பைடன் அதிபர்தான்.

BBC

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.