(எம்.மனோசித்ரா)

பல்கலைக்கழகங்களுக்கு இணைய வழியூடாக புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சுதந்திரத்துக்குப் பின்னர் அதிகளவான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணைய வழியூடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இணைய வழியூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெற்றிகரமாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பரீட்சைகளையும் நடத்தக்கூடியதாகவிருந்தது.

இதேவேளை தற்போது பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளும் இணைய வழியூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எந்த வருடமும் இல்லாதவாறு இம்முறை 41500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர். இவ்வாறு உள்வாங்கப்படுவர்களுக்கு டிசம்பரில் இணைய வழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்றார்.

அத்துடன் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இணையத்தளம் வளியாக பரீட்சைகளை நடத்துவது என்பது ஒரு புதிய விடயமல்ல. இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் பல்கலைக்கழக நடைமுறை விதிகள் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.