அமெரிக்க தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் - வெல்லப்போவது யார்?

 


அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை தீர்மானிக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அடுத்த சில நாட்களில் உலகின் சக்தி வாய்ந்த நபர் யார் என்பதை அமெரிக்க மக்கள் தீர்மானிப்பார்கள்.

இந்தத் தேர்தலின் பிரதான நாயகர்கள், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் 2016ல் பதவியேற்றத்தில் இருந்து அங்கு உள்நாட்டு அரசியல் மட்டுமல்லாமல், சர்வதேச அரசியல், பன்னாட்டு உறவுகள் மற்றும் நிகழ்வுகள் பெரும் மாற்றத்தை சந்தித்து விட்டன.

அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றுவேன் என்ற அவரது தேர்தல் கோஷம், அங்கு இருந்த வலது சாரி வெள்ளை இன மக்களை ஈர்த்தது, கிராமப்புற மக்கள், தொழில் நலிவடைந்த பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் தென் அமெரிக்க வம்சா வளியினர் அவருக்கு பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க்கப்பட அவர் முன்வைக்கும் வாதம், இந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதாரத்தை வலுவடையத் செய்தது, சர்வதேச அரங்கில் அமெரிக்க நலனை ஆணித்தரமாக முன்வத்தது, ராணுவத்தை வலுப்படுத்தியது மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தியது போன்றவையாகும்.

உலகின் மற்றொரு பொருளாதார வல்லரசான சீனாவுடனான வர்த்தக உறவில் அமெரிக்கா பெருமளவு பின் தங்கி இருந்தது. அதாவது அமெரிக்கா சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட, சீன பொருட்கள் பெருமளவில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வர்த்தக பற்றாக்குறை வித்தியாசம் 345 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகம்.

இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை சரி செய்ய அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சீன பொருட்கள் மீது கூடுதல் வரி சுமத்தப் போவதாக அறிவித்தார். இறுதியில் வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 250 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பொருட்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டது. இது அமெரிக்காவின் விவசாய ஏற்றுமதியை பெருமளவு நம்பியிருக்கும் அமெரிக்க மாநிலங்களில் அவருக்கு பெரும் ஆதரவை கூட்டியது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் விதமாக பல்வேறு மனித உரிமை குழுக்களின் எதிப்பையும் மீறி அண்டைய நாடான மெக்ஸிகோவுடனான எல்லையை ஒட்டி ஒரு தடுப்பு சுவரையும் எழுப்ப டிரம்ப் உத்தரவிட்டார். இது அமெரிக்காவில் வலது சாரி எண்ணம் கொண்டோரிடையே அவரது செல்வாக்கை உயர்த்தியது.

இப்படி பல்வேறு விடயங்கள் டிரம்ப்பிற்கு ஆதரவாக இருந்ததால் அவரே மீண்டும் தேர்தலில் வெல்வார் என்ற கருத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவியது. ஆனால், கொரோனா வைரஸின் வருகை, அமெரிக்காவையே புரட்டிப் போட்டு விட்டது.

அமெரிக்காவில் தற்போது 90 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர 2.30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்து போயிருக்கிறார்கள். உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. தொடக்கத்திலேயே டிரம்ப் நிர்வாகம் சுதாரித்து செயல்பட்டிருந்தால், கொரோனாவின் பாதிப்புக்களை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றே பலரும் கருதுகின்றனர்.

"இந்த அதிபர் தேர்தலில் கொரோனா பெருந்தொற்று, ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோவிட்-19 வைரஸ் பரவலை டிரம்ப் நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்று மக்கள் நம்பறாங்க. அதனால் வருகின்ற தேர்தலில் இந்த பெருந்தொற்றை யார் நன்கு கையாளுவார்கள் என்பதை தீர்மானித்து மக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்," என்கிறார் வாஷிங்டன் நகருக்கு அருகே வசிக்கும் சமூக ஆர்வலர் சுந்தர் குப்புசாமி.

கோவிட் 19 வைரஸ் இரண்டாவது பரவல், வெகு வேகமாக பலரையும் பாதித்து வருகிறது. டிரம்ப் அவர்களே இந்த வைரசால் பாதிக்கப்பட்டாலும் அதனுடைய தீவிரத்தை அவர் உணரவில்லை. சமூக கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தை சரிவடைய செய்கிறது என்பது அவரது வாதம்.

"கொரோனாவை எதிர்கொள்ளும் சூழ்நிலை எவ்வாறு மாறுகிறது என்பதை பார்த்து டிரம்ப் நாளுக்கு நாள் முடிவெடுத்தார். நிலைமைக்கு ஏற்ப செயல்பட்டார்," என்கிறார் அமெரிக்க அரசியல் துறை பேராசிரியர் ஜோ கெர்ஷ்டென்சன்.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் பாதிப்படைந்தது. லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்து விட்டனர்.

இந்த பெருந்தொற்றின் விளைவாக குடியரசு கட்சி வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட பென்சில்வேனியா, அரிசோனா மற்றும் விஸ்கான்சின் போன்ற மாகாணங்களில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்தார்.

"சமூக வலைதளங்களில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பை கடுமையாக விமர்சிப்பது, மிகைபடுத்தப்பட்ட தகவலை வெளியிடுவது, போன்றவை நடை பெறுவதாகவும், இந்த சமூக வலைதளங்கள் இந்த தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றும்," என்கிறார் இந்திய அமெரிக்க்க சமூக ஆர்வலர் எம் ஆர் ரங்கஸ்வாமி.

எதையும் வெளிப்படையாகவும், அடுத்தவர் மனம் புண்படுமா என்பதை பற்றி கருதாமல் மனதில் தோன்றியதை பட்டென பேசும் டிரம்ப் அவர்களின் சுபாவம், அமெரிக்கர்களிடையே பெரிய கருத்து வேறுபாட்டை உண்டாக்கி இருக்கிறது. இன ரீதியாக பிளவு, கொள்கை ரீதியிலான பிளவு போன்றவை அமெரிக்காவை பெரிதும் பாதித்திருப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது.

இந்த தேர்தலில் மிக குறிப்பிடத்தக்க அம்சமாக வாக்குரிமை செலுத்த இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அமெரிக்க தேர்தலில் பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

"வரலாற்றில் இல்லாத அளவிற்கு இளைஞர்கள் இந்த தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களின் வாக்குகள் இத்தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார்," பிலடெல்பியா நகரில் வசிக்கும் முரளி பாலாஜி. இவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் ஆதரவாளர்.

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனை பொறுத்தவரை அவருக்கு நீண்ட அரசியல் அனுபவம். இரண்டு முறை அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில், துணை அதிபராக இருந்திருக்கிறார். இளம் பிராயத்தினர், கருப்பின மக்கள், தெற்காசிய வம்சா வளியினர் என பலதரப்பு ஆதரவு அவருக்கு இருக்கிறது.

இது தவிர முதன் முறையாக கறுப்பின மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் அவர்களை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்திருப்பதும் பைடன் அவர்களுக்கு வலு சேர்த்திருக்கிறது.

"நடுத்தர மாற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கு மருத்துவ காப்பீடு, வெளிநாடுகளில் இருந்து குடியேற, பணி புரிய வருபவருக்கு உதவிகள் போன்றவை பைடனின் கொள்கைகள். அவர் அனைவரையும் அரவணைத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது," என்கிறார் சுந்தர் குப்புசாமி.

அவருக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனம் 78 வயதில் அவரால் உலகின் கடினமான பணிகளில் ஒன்றை செய்ய முடியுமா என்பது. இது தவிர, பிரச்சார மேடைகளில் கவன குறைவாக பேசுவது, மறதி போன்றவை அவரது பலவீனம் என்கிறார்கள்.

"தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயர சம்பவங்களை சந்தித்தவர் ஜோ பைடன். அதையெல்லாம் தாண்டி வந்து சாதித்து இருக்கிறார். பிளவு பட்டுள்ள அமெரிக்காவை ஒன்றுபட வைக்க ஜோ பைடனால் முடியும். இன, நிற, மத பேதமில்லாமல் அனைவரையும் அரவணைக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது," என்கிறார் கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஜனநாயக கட்சியின் ஆதரவாளரான ஹரிணி கிருஷ்ணன்.

தற்போதை கருத்துக் கணிப்புக்கள் எல்லாமே ஜோ பைடன் கணிசமான அளவில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இது அவருக்கு வாக்காளர் மத்தியில் உள்ள பிரபலத்தை காட்டுகிறது. அனால், அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்களின் நேரடி ஆதரவு மட்டும் போதாது.

அமெரிக்கா தேர்தல் முறையில் ஒவ்வோர் மாநிலத்திலும் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கை 538. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பிரதிகள் அமெரிக்கா அதிபரை தேர்வு செய்வார்கள். அதிபராக தேர்வு செய்யப்பட 270 பிரதிநிதிகள் தேவை. சென்ற முறை அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன், நேரடி தேர்தலில் டிரம்ப்பை விட 28 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்ற போதும், தேவையான பிரதிநிகளை பெற தவறியதால் அதிபர் ஆகும் வாய்ப்பை இழந்தார்.

சென்ற மாதம் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப், கடந்த பத்து தினங்களாக அயராது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது தேர்தல் உத்தியையும், தேர்தலுக்குப் பின் என்ன முடிவு எடுப்பார் என்பதை தீர்மானிப்பது கடினம். தேர்தலில் அவர் ஒருவேளை தோற்று விட்டால் அதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்றும் கூட ஒரு அச்சம் நிலவுகிறது. ஏற்கனேவே தபால் வோட்டு போன்றவற்றில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

தேர்தல் முடிவை எதிர்த்து அவர் அமெரிக்கா உச்ச நீதிமன்றம் செல்லக் கூடும் என்ற அச்சத்தையும் வெளியிடுகிறார்கள், அவரது விமர்சகர்கள். இதன் விளைவாக தேர்தல் முடிவுகள் வர தாமதம் கூட ஆகலாம்.

ஆனால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அதை மீறி டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்தும் இருக்கிறது.

இன்னும் சில தினங்களுக்கு உலகின் கவனம் அனைத்தும் அமெரிக்காவின் மீதே இருக்கப்போகிறது.

BBC 

அமெரிக்க தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் - வெல்லப்போவது யார்?

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.