தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறையில் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்கள் ஊடாக விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உணவு பொருட்கள், மரக்கறி, மீன் மற்றும் மருந்து வகைபோன்ற அத்தியவசிய பொருட்களை பொது மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மார்ச் மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வகையில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் சிபாரிசை பெற்றுக்கொண்ட பின்னர் பொலிஸ் நிலையங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட அனுமதி வழங்கப்படும்.

இதற்காக சம்பந்தப்பட்ட நபர் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட வர்த்தகத்தை மேற்கொள்வதாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்.

உணவு, மரக்கறி மற்றும் மீன் வகைகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும் நபர்கள் இவ்வாறு அனுமதியை பெற்றுக்கொண்டு அவசரகால சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு செல்லமுடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் பொதுமக்கள் வீடுகளிலையே இருக்கவேண்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்களை தாம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.