அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வரும் வாட்சன், அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறார் என்ற தகவல் ஊடகங்களில் நேற்று வெளியான நிலையில் இன்று அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஷேன் வாட்சன்.

"ஐந்து வயது இருக்கும்போது டெஸ்ட் போட்டி ஒன்றை பார்த்துவிட்டு நான் ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று எனது தாயிடம் கூறியதில் தொடங்கியது எனது இந்த பயணம். தற்போது நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்," எனத் தனது யூட்யூப் சேனலில் தெரிவித்துள்ளார் வாட்சன்.

"கடந்த மூன்று வருடங்களாக என்னிடம் அன்பு காட்டிய சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடியதுதான் எனது கடைசி போட்டி என்று தெரிந்து, இது சரியான நேரம் என்று எனக்கு தோன்றியது." என்றும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான ஷேன் வாட்சன் 2015ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின், 2016ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்திருந்தார்.

அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் ஷேன் வாட்சன்.

சென்ற வருட ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சிஸ்கே அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் சிஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் ஆட்டத்தின் முடிவில் சிஸ்கே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

சிஸ்கே அணி தோல்வியுற்றாலும் கால்களில் ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றார் வாட்சன். குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.