அவுஸ்திரேலியா -இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மிகப்பெரிய இலக்கு என்பதால் இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேஎல் ராகுல் 22 பந்தில் 30 ரன்களும், தவான் 36 பந்தில் 52 ரன்களும், விராட் கோலி 24 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.

கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை சாம்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் ஹர்திக் பாண்ட்யா.

கடைசி 3 ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஆடம் சம்பா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் இந்தியா 2 ரன்களே எடுத்தது. ஆனால் 4-பந்தை இமாலய சிக்சருக்கு அனுப்பினார் ஷ்ரேயாஸ் அய்யர். அதோடு மட்டுமல்லாமல் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைக்க கடைசி 2 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை டை வீசினார். இந்த ஓவரில் பாண்ட்யா இரண்டு பவுண்டரி விரட்டினாலும் 11 ரன்களே கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.


சாம்ஸ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன் அடித்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் ரன் அடிக்காத ஹர்திக் பாண்ட்யா 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ரன்களும் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.