வடக்கிலுள்ள தொழிற்சாலைகளுக்கான பணிகளுக்கு தெற்கிலிருப்பவர்கள் இனிமேல் அமர்த்தப்பட மாட்டார்களென உறுதிபடத் தெரிவித்துள்ள கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு, அவரது மக்களுக்காக பெற்றுத்தர தயாராகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியவற்றை திறந்துவைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், தெற்கிலுள்ள பிள்ளைகள் எத்தகைய வரப்பிரசாதங்களை எல்லாம் அனுபவிக்கின்றார்களோ வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டுமென்பதே எமது விருப்பமாகும். இது தொடர்பில் இந்த அரசில் இருக்கின்ற அனைத்து அமைச்சுகளுக்கும் அக்கறையும் இருக்கின்றது. அத்தகைய ஒரு செயற்பாடுதான் இன்று ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியனவாகும்.

இவ்வாறான தொழில் பெறும் மையங்களை உருவாக்குவது இங்குள்ள மக்களின் தொழில் வாய்ப்புக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதற்கேயாகும். அத்துடன் இனிமேல் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கான தொழிலுக்கு தெற்கிலிருப்பவர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு துறைமுக அதிகார சபை, துறைமுகம் சார்பான பயிற்சிகளை இங்குள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். அதனூடாக இங்குள்ள மக்களும் அத்துறையில் தொழில் பெறவேண்டும் என்பதே எமது அரசின் நோக்கமாகும்.

இந்த இடத்தில் நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்பகிறேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நீண்ட நாள் நண்பர். அவர் நல்ல இதயம் கொண்டவர். அவர் எப்போதும் தனது மக்களுக்காகவும் அந்த மக்களின் நலன்கருதியும் அரசுடன் இணைந்து பல திட்டங்களை வகுத்து பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்ற ஒருவர்.

அதேவேளை அவர் இக்கட்டான எந்தச் சந்தர்ப்பத்திலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எம்மை விட்டு அமைச்சுப் பதவிகளுக்காக அடுத்த அரசாங்கங்களின் பக்கம் தாவிச்சென்றது கிடையாது.

அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தமிழ் மக்களுக்கு இன்னும் பல அபிலாஷைகள் கிடைக்கும் என்றும் தெரிவித்த அமைச்சர், நாம் அனைவரும் இன மத பேதங்களின்றி இலங்கையர் என்ற எண்ணத்துடன் ஒற்றுமையாக பயணித்தால் எமது நாட்டை வலுவான தேசமாக கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.