இர்பான் இக்பால்

கொரோனா தீ பலி கொள்ளும் உடல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதற்கு இந்த தீவுக்கேயுரிய விஞ்ஞானம் என்றும் விளக்கம் கூறி, 20 நாட்களின் முன் ஏன் பிறந்தேன்? என்று ஒரு பச்சிளங்குழந்தையின் ஆத்மாவையும் ஏங்க வைத்து விட்டார்கள்.

நம்பியவர்கள் எல்லோரும் கைவிட்டிருந்த நிலையில் நீதிமன்றம் கை கொடுக்கும் என்று காத்திருந்தோம். அங்கு வாசற்படியைக் கூடத் தாண்ட முடியாமல் போய்விட்டது. எனக்குத் தீராத சந்தேகம்! அந்த அளவுக்கு அவர்கள் கூறும் விஞ்ஞானத்தை எதிர்கொள்ள முடியாமல் போய் விட்டதே என்ற மனத்தாங்கல்.

ஆதலால், நீதிமன்றில் வாதிகளும் - பிரதிவாதிகளும் முன் வைத்த அத்தனை ஆவணங்களையும் பெற்று அதனைக் கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன். முதலில், வியாழன் வழக்கை விசாரித்திருந்தால், நல்ல நீதிபதிகள் குழுவே இருந்தது என்று எம் சமூகத்தவர் வெளியிட்ட ஆதங்கத்துக்கு மதிப்பளித்து, சுகாதாரத்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதில் ஆவணங்களைப் பார்த்தேன். பின் இறுதியாக வழக்கில் இணைந்து கொண்ட பேராசிரியர் மெத்திகாவின் பிரமாணப் பத்திரத்தையும் அது சார்பான விளக்கங்களையும் அவர் தம் தகைமைகளைப் பட்டியலிட்டிருக்கும் விதங்களையும் பார்த்தேன்.

மனது ஒரு இடத்தில் தரித்து நின்றது. ஜுன் முதல் நவம்பர் வரை கிடைத்த காலப் பகுதியில் அரசாங்கம் கச்சிதமாக தயாராகியிருக்கிறது, குறையின்றி ஆவணங்களால் தமது தரப்பு வாதங்களை நிரப்பியுள்ளது என்பதை அறிந்து கொண்டேன். அதற்காக, நம் தரப்பில் முன் வைத்த வாதங்கள் எந்த வகையிலும் குறைவானவையன்று. ஆயினும், கோணங்களில் வித்தியாசமிருப்பது நன்கு புலப்படுகிறது. எவ்வாறாயினும், நீதிமன்றை நாடும் முயற்சியும் முடிந்த கதையென்பதால் இனி எங்கே? என்ற தத்தளிப்பு தொடர்கிறது.

அரசின் திடீர் அறிவிப்பொன்று வரும். அது அலி சப்ரிக்காக வரும், அதனை மர்ஜான் பளீல் உரிமை கொண்டாடலாம், 20ம் திருத்தச் சட்டத்துக்காக மக்களை ஏமாற்றித் தாவிய அந்த ஏழு பேரும் கூட தம் பாய்ச்சலை நியாயப்படுத்தலாம் என்று காத்திருக்க, உலகையறியா பாலகன் ஷாயிக் பாஹிம் பிறந்து இருபதே நாட்களில் தீக்கிரையானான்.

மேற்குலகம் தடுப்பூசியும் கண்டுபிடித்து விட்டது. ஐக்கிய இராச்சியத்தில் 90 வயது மூதாட்டியின் வாழ்வுரிமையை மதித்து அவருக்கே முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால், சம காலத்தில் உலகில் எங்குமே இல்லாதவாறு பச்சிளங் குழந்தையின் உடலிலிருந்தும் கொரோனா பரவும் என்று கூறி பல ஜனாஸாக்கள் கட்டாயமாக எரிக்கப்படுகிறது. 

உடலங்களைப் பொறுப்பேற்க மாட்டோம் என்று குடிமக்கள் அஹிம்சாவழி போராட்டத்தில் ஈடுபட்டாலும் இறுதி நேரம் வரை அவர்களது உணர்வுகளைத் தூண்டியாவது எரிப்புக்கு கையொப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இத்தனைக்கும் இது இன்னும் அப்பாவி மக்களைத் தாண்டி, நாடாளுமன்ற நாற்காலிகளை சூடாக்குவோரால் உணரப்படவில்லை.

ஆதலால் தீயெம்மைச் சுடவில்லை, மாறாக தீயவர்களே சுடுகிறார்கள். நல்லவர்களின் மௌனம் தீயவர்களின் வன்மத்தை விட ஆபத்தானது என மார்டின் லூதர் கிங் கூறியதன் அழுத்தமான விரிவை இப்போது எம் சமூகத்தின் நிலை கொண்டு அளந்து கொள்ளலாம். அந்த அளவுக்குத் தம் அரசியல் தேவைகளுக்காக பச்சிளம் பாலகனின் அடையாளத்தையே மாற்றிப் பேசும் அளவுக்குத் தரம் தாழ்ந்து போயுள்ளார்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.

அரிசியையும், பொருளையும், பணத்தையும் வாங்கி விட்டு வாக்களித்த மக்களுக்கு திருப்பிக் கேட்கத் திராணியிருக்கிறதா? என அண்மையில் முன்னாள் பிரதியமைச்சர் அமீர் அலி ஒரு கேள்வியைக் கேட்டார். ஆமோதிக்கும் வகையிலே தான் மக்களின் மௌனமும் இருக்கிறது. உரிமைகளை வெல்லப் போனதாகக் கூறுபவர்கள் அடங்கியிருக்க, கிழக்கின் இன்னொரு மூலையில் சாணக்கியனுக்கு எதிராகப் பாரிய சத்தம்.

தனக்குக் கிடைத்த நேரத்தில் தன் உள்ளக்கிடக்கையை உணர்வுபூர்வமாக வெளியிட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கண்டு இவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்? என்ற கேள்விக்குள்ளேயே விடை தங்கியிருப்பதால் அதனை ஆழமாக ஆராய வேண்டியதில்லை. ஆயினும், நம்மை நாமே தொடர்ந்தும் தனிமையடையச் செய்கிறோம் என்பது திறந்த கண்களுக்குத் தெரியும் பரகசியமாகிறது.

ஜேர்மனியில் நாசிப்படையினரின் வளர்ச்சியையும் புத்திஜீவிகளின் அக்கால மௌனத்தையும் விளித்து, பாஸ்டர் மார்ட்டின் நீமலார் எழுதிய கவிதை உலகப் பிரசித்தி பெற்றது. அக் கவிதையின் தமிழாக்கம் கீழ்க்காணுமாறு:

" அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள் - நான் பேசவில்லை. ஏனெனில் நான் சோசலிஸ்டில்லை.

அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள் - நான் பேசவில்லை. ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியுமில்லை.

அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள் - அப்போதும் நான் பேசவில்லை. ஏனெனில் நான் யூதனில்லை.

பின்... அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள் - அந்நேரத்தில் எனக்காகப் பேச ஒருவரும் இருக்கவில்லை!

First, they came for the socialists, and I did not speak out because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out because I was not a Jew.

Then they came for me and there was no one left to speak for me. "

இலங்கை முஸ்லிம்களின் நிலையும் ஏறத்தாழ இது தான். நாம் நமக்குள் வளர்த்துக்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு மனப்பான்மை நம்மை எங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிற்து என்கிற மீள் வாசிப்புக்கு நாம் இன்னும் தயாரில்லை. ஆதலால், இதன் தாற்பரியம் புரியப் போவதுமில்லை.

ஆயினும், சமூகம் மறந்து போவதை அடிக்கடி ஞாபகமூட்டுவது என் போன்றவர்களுக்குக் கடமையாகிறது. ஆதலால், எத்தனை தடவை வேண்டுமானாலும் அந்த இலக்குக்காக கருத்தியல் போராட்டத்தை முன்னெடுக்கலாம். எனினும், இந்த கருத்தியலை அரசியல் மிக மோசமாக மேவிக் கொள்கிறது. சுயநல சிந்தனைப் போக்குள்ளவர்களின ஆளுமைக்குள் சிக்கித் தவிக்கும் மக்களை மிகத் தாமதமாகவே சென்றடைகிறது.

ஆதலால், தன் வீடு எரிந்து கொண்டிருந்தாலும் தூரத்தில் உள்ளவனைக் குறை கூறுவதன் ஊடாக கலைந்து போகும் புகைக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எம் அரசியல்வாதிகள்.

தொடர்ச்சியாக இலங்கைத் தீவில் ஆறு நூற்றாண்டுகளாக பல்வேறு வகை இன்னல்களை சந்தித்து வரும் முஸ்லிம் சமூகம், ஒரு போதுமில்லாதவாறு தற்காலத்தில் சிதைந்து போயுள்ளது. அதற்கு அரசியல் பிரதான காரணமாக இருக்கும் அதேவேளை சமூகத் தலைமைத்துவம் முற்றாக வெறிச்சோடிப் போயுள்ளது. 

யாரிந்த இடைவெளியை நிரப்புவது என்று தேடிக்கொண்டிருக்கையில் அவ்வப்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு ஏசியாவது மக்கள் தம்மைத் தாம் தேற்றிக் கொள்கிறார்கள். அவர்களும் இந்த சமூகக் களத்தில் அவ்வாறான பலவீனமான சிந்தனைவாதிகளாக உருவெடுத்துள்ளார்கள். 2012;ல் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்துக்கு முகங்கொடுக்கவிருந்த அரசுக்காக விசேட பிரார்த்தனை செய்தார்கள், பிரார்த்தனை நடந்த அதே பள்ளிவாசலை புனித பூமிக்குள் இருப்பதாக இனவாதிகள் சொந்தங் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

ஹலால் முதல் இறுதியாக வந்த ஜனாஸா அடக்கத்துக்கான அனுமதியென்கிற செய்தி வரை அரசியலில் சிக்குண்டு தவிக்கும் அந்த அமைப்பு தம் சமூக வகிபாகத்தில் அளவு கடந்து விட்டதென்கிற விமர்சனங்களை மறைத்துக் கடந்து செல்ல முடியாது. அது போல, தம்மால் இயலாதவற்றை ஜம்மியாவின் தலையில் போட்டு அரைத்து விட்டுச் சென்ற எம் அரசியல்வாதிகளின் கடந்த கால செயற்பாடுகளையும் இங்கு சுட்டிக்காட்டாமல் விட முடியாது.

எவ்வாறாயினும், சீரான சமூக இயக்கத்துக்கு அவரவர் தம் வகிபாகங்களை உணர்ந்து செயற்படுவது அவசியப்படுகிறது. சிறியதோர் சமூகமாக இருந்த வரை அன்றைய கால சமூகத் தலைவர்களிடமிருந்து ஒழுங்கான செய்தியும் வழிகாட்டலும் மக்களைச் சென்றடைந்தது. இன்றைய நிலையில் எம்மிடம் தலைவர்கள் மிஞ்சி விட்டார்கள். அதுவும் பணமிருப்பவன் எல்லாம் சமூகத்தின் வழிகாட்டியென கொண்டாடப்படும் சூழ்நிலையென்பதால் இந்தச் சிதைவின் பரிமாணம் பல கோணங்களைச் சென்றடைந்துள்ளது.

சமூகப் பணியென்பது யாருக்காவது பண – பொருளுதவிகள் செய்வது மாத்திரம் என்பதே பலரது நிலைப்பாடு. எனவே, வருடத்துக்கொரு தடவை தம் பங்கைக் கொடுத்து விட்டு பெருமூச்சு விட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சிலர், அடுத்தவரிடம் வாங்கியாவது இல்லாதவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும் என்று உழைக்கிறார்கள். இவ்வாறு எல்லாமே ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மாத்திரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், தேவைகள் மாத்திரம் விரிந்து கொண்டே செல்கிறது.

ஆங்காங்கு கல்வியபிவிருத்தி – சமூக அபிவிருத்தியென்ற கோசங்களும் எழாமலில்லை. ஆயினும், பொறுப்பிலிருக்கும் ஒரு அமைச்சர் தன் கடமையைச் செய்வதையே மாலையிட்டுக் கொண்டாடி, அதற்கொரு விழா எடுத்துப் புகழ்பாடும் வழக்கமுள்ள சமூகக் குழுமத்தில் அவற்றின் தாக்கம் சீரானதாக இல்லை.

தனி மனித தேவைகளை மிஞ்சிய சமூக சிந்தனையை வறுமையில் வாடும் மக்களிடம் எதிர்பார்க்கவே முடியாத சூழ்நிலை நிலவுவதையும் சொல்லாமல் இருக்க முடியாது. சிலருக்குத் தாமும் முஸ்லிம்கள் என்பதே கஷ்டம் வந்தால் தான் தெரியவருகிறது. வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் தான் மார்க்கம் ஞாபகம் வருகிறது. ஊருக்கு ஒரு பிரச்சினை வந்தால் தான் ஒற்றுமை ஞாபகத்துக்கு வருகிறது.

இதையெல்லாம் தாண்டி, என்னதான் அல்லோலகல்லோலப் பட்டாலும் ஓரணி திரள முடியாத படி நம் சமூகம் பல கூறுகளாகப் பிரிந்து போயுள்ளது. ஐந்து வருட கால நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தம் சமூகத்தின் உணர்வுகளை விடப் பெறுமதி வாய்ந்ததென தீர்மானித்து, காடையர்களை அவிழ்த்து விட்டு உரிமை பற்றிப் பேசுபவர்களையும் எள்ளி நகையாடி வருகிறது. பலர் நமக்கேன் வம்பென ஒதுங்கிக் கொள்கிறார்கள். சிலர், இந்த பெருச்சாளிகளை கணக்கிலெடுக்காது தம் சமூகப் பணிகளைத் தொடர்கிறார்கள்.

இன்றைய ஜனாஸா எரிப்பின் பின்னணியிலான வேதனை தமக்குமுரியது என்று சிந்திக்கத் தெரியாதவர்களே அரசியலில் அதிகம் இருப்பதால், தம்மை வேறுபடுத்தி அடுத்தவனைக் கேள்வி கேட்டுக் கொள் என்றும் காரணம் சொல்லித் தப்பிக் கொள்கிறார்கள். ஆக, எது பொதுப் பிரச்சினை? எது தமக்கான பிரச்சினையென்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ அடிமட்ட மக்களாகவே இருக்கிறார்கள்.

இன்றைய ஜனாஸா கைவிடும் அஹிம்சைப் போராட்டத்தையும் அடி மட்ட மக்களே முன்னெடுக்கிறார்கள். நாளை வேறெந்த எதிர்ப்புப் போராட்டம் முன் மொழியப்பட்டாலும் அதையும் அவர்களே முன் நின்று நடாத்துவார்கள். ஆனால், சமூகத்தளத்தில் இறங்கி நின்று இதனைத் தலைமை தாங்கவும் வழி நடாத்தவும் யாருமில்லா, வழியுமில்லா நிலை.

இன்னொரு படி மேலே சென்று பேசும் சில அரசியல் விற்பன்னர்கள், முஸ்லிம் சமூகம் முழுமையாக ராஜபக்ச அரசை ஆதரிக்காததால் தான் ஜனாஸா எரிப்பைத் தடுக்க முடியாது என்றும் தம்மைத் தூர தேசத்தில் வைத்து வியாக்கியானம் பேசுகிறார்கள். இவ்வாறு சுற்று முற்றும் திரும்பிப் பார்க்கும் போது யார் தீயவர்கள்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

எந்தத் தீயவனை நாம் தேடுகிறோம் என்பதில் தெளிவு பிறந்தால் அவன் நம் அருகிலேயே இருக்கிறான் என்கிற புரிதலும் வரும். அடுத்த நான்கு வருடங்களுக்கு இதை நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினமான செயல் தான். அதற்குள் இன்னும் எத்தனையோ ஆயிரம் போராட்டங்கள் - மாற்றங்கள் வந்து போய் விடக் கூடும். என்றாலும், இன்றைய வேதனை இதுவரை எந்தக் காலத்திலும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளாத சோதனை.

நூறு வருடங்களுக்கு முன் சிறிய சமூக உரிமைகளாயினும் கூட அதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போராடித் தக்க வைத்துக் கொண்ட சமூகத்தின் தொடர்ச்சிக்கு நாமும் பங்காளிகள் தானா? என்ற கேள்வியெழுகிறது. கடந்த நூற்றாண்டில் இச்சமூகம் கண்ட அரசியல் மற்றும் ஆன்மீகச் சிதைவுகளை ஒன்றிணைப்பதும் ஒன்றும் அத்தனை இலகுவான காரியமன்று. அதற்கொரு நூற்றாண்டு வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆனாலும், எம்மத்தியில் தெளிவும் தேடலும் அவசியப்படுகிறது. அது யாருடையதோ கடமையென ஒதுங்காத சமூக சிந்தனை தேவைப்படுகிறது. இதையெல்லாம் வளர விட்டு விட்டால் தம் பாடு என்னாகும் என்ற கவலையுள்ள தீயவர்களை அடையாளங் காணும் அவசியமும் இருக்கிறது.

உடல் தொடும் தீயை நாம் உணரப் போவதில்லை ஆனால் உயிரோடிருக்கும் வரையாவது உணர்வோடு வாழ வேண்டிய தேவையுள்ளது. 

Irfan Iqbal

11-12-20

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.