இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை சேர்ந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

உலக நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று இஸ்லாமிய சமய முறைக்கமைவாக ஜனாசாவை எரிக்க வேண்டாம் எனவும், மத அனுஸ்டானங்களிற்கு ஏற்ற வகையில் அதனை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதோ போன்றதொரு போராட்டம்,  சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் "என்ற தொனிப்பொருளில் இன்று (16)கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதனை, கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி அவர்கள் பதாதைகளை ஏந்தி கவன் சீலை வெள்ளை துணிகளை கட்டி தமது உரிமைப் போராட்டத்தை அமைதியான முறையில்  நடத்தினார்.

அங்கு கருத்து தெரிவித்த  நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, பல்லின சமூகம் வாழுகின்ற பழமொழிகள் பேசப்படுகின்ற பல்வேறு மத, சமய, கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழுகின்ற இந்த இலங்கைத் திருநாட்டிலே சிறுபான்மை சமூகத்தின் வாழ்வுரிமை, மத உரிமை ,கலாச்சார உரிமை, நில உரிமை பாதுகாக்கப்படுகின்ற போது தான் இன நல்லிணக்கத்தோடு, பிரச்சினைகள் இன்றி இந்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

ஆனால் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வழங்குவதில் எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் குறை சொல்லி சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான குரல்களை எழுப்பி ஆட்சிக்கு வருகின்றனர்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையினை இல்லாமல் செய்து கட்டாயத்தின் பேரில் அரசாங்கத்தினால் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றன. இது மிகவும் கண்டிக்கப்பட கூடிய விடயமாகும்.

குறிப்பாக பிறந்து  20 நாட்களே ஆன ஒரு குழந்தையின் உடல் கூட எரிக்கப்பட்டது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு இன் நாட்டு மக்கள் உட்பட உலக நாடுகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி இருப்பது மிகவும் வேதனையான விடயமுமாகும் என்றார்.

இதே வேளை இன்று வட - கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டங்கள் இடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.